நாராயணமூர்த்தி

நாராயணமூர்த்தி
சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த நாராயண மூர்த்தி, ஒரு தொல்ழிலைத் தொடங்குவதற்குப் பதில் வேறு எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அவர் வாழ்க்கையின் ஒவ்வோர் அடியிலும் ஏதோ திருப்பங்கள் அவரை வேறு திசை நோக்கிப் பயணம் செய்ய வைத்தன. படிப்பில் கெட்டிக்காரராண நாராயண மூர்த்தி ஐஐடி கான்பூரில் மின்னணுப் பொறியியல் படித்தார். ஆனால் கிடைத்த நல்ல வேலைகளை விடுத்து ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு செய்த ஆராய்ச்சியின் பலனாக பிரான்ஸில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சென்றவர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார். அதில் மூழ்கிவிடாமல் இருக்க மூன்றுநாள் சிறைவாசம் துணைபுரிந்தது! இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது நாட்டின் பிரச்சனைகளுக்கு அறிவியல் மூலம் தீர்வுகாணும் ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அவரைப் பொருட்படுத்தவில்லை என்பதால் தானே சொந்தமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். 1990களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோது அதனை முழுமையாகப் பயன்படுத்திகொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ் இப்பொழுது ரூ. 10,000 கோடி வருமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு யாராவது ஒருவரைக் காரணமாகக் காண்பிக்க வேண்டுமானால் அது நாராயண மூர்த்தியாக மட்டும்தான் இருக்க முடியும்!