மலாலா: ஆயுத எழுத்து

மலாலா: ஆயுத எழுத்து
மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும்.
பலரும் நினைப்பதைப்போல் தாலிபனால் சுடப்பட்டதாலோ, மரணத்தோடு போராடி மீண்டு வந்ததாலோ மலாலாவுக்கு வரலாற்றில் இந்த இடம் கிடைத்துவிடவில்லை. நோபல் அமைதிப் பரிசு கிடைத்ததால் மட்டும் அவர்மீதான நம் மதிப்பு கூடிவிடவில்லை. இவையெல்லாம் முக்கியம் என்றாலும் மலாலா தொட்டிருக்கும் உயரம் இதையெல்லாம்விட அதிகமானது.
பாகிஸ்தானில் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட பெண் குழந்தை களுக்காக மலாலா விடுத்த போராட்ட அறைகூவல் அவரை உலக அரங்கின் மையத்தில் நிறுத்தியிருக்கிறது. ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் தொடங்கி உலக வல்லரசான அமெரிக்காவுக்கே ஒரு பெரும் சவாலாகத் திகழும் தாலிபனைத் தனியொரு நபராக மலாலா எதிர்கொண்டபோது அவர் ஓர் அதிசயப் பிறவியாக உலகத்தால் பார்க்கப்பட்டார். தாலிபனின் துப்பாக்கியைக் காட்டிலும் வலிமையான ஆயுதம் கல்வி; ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த ஆயுதம் கிடைத்தாகவேண்டும் என்று அவர் முழங்கியபோது உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது.
ரஞ்சனி நாராயணின் இந்தப் புத்தகம் மலாலாவின் வாழ்வையும் அவர் இயங்கிய பின்னணியையும் எளிமையாக அறிமுகப் படுத்துகிறது.