காந்தியார் சாந்தியடைய

காந்தியார் சாந்தியடைய
காந்தி ஒழிக்கப்பட்ட வேண்டிய சக்தி என்று ஒவ்வொரு நாளும் எதிர்த்து எழுதிவந்தவர் பெரியார். ஆனால் மதவாத சக்திகளால் காந்தி கொலை செய்யப்பட்டதை அறிந்த மறுகணமே "இருந்தது ஆரிய காந்தி; இறந்தது நம் காந்தியார்" என்று சொல்ல ஆரம்பித்தார். நாடு முழுவதும் காந்திக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது திராவிட இயக்கம். அதன் தொடர்ச்சியாக, ஆசைத்தம்பி எழுதிய புத்தகம் வகுப்பு வாதத்தை தூண்டக்கூடியதாக தடை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்துகிறது இந்தப் புத்தகம்.
“அரசியலில் ஆன்மிகத்தைக் கலந்த பாவத்தை நான்தான் செய்தேன். அதற்கான தண்டனையை நான்தான் அனுபவிக்க வேண்டும்” – என்று இறுதிக் காலத்தில் இதயம் நொந்து சொன்னார் காந்தி. அதற்கான தண்டனையை இரக்கமற்ற இதயம் கொடுத்தது. இந்து துன்பம் அனுபவித்தால் முஸ்லிம் வருத்தப்பட வேண்டும். முஸ்லிம் துன்பம் அனுபவித்தால் இந்து வருத்தப்பட வேண்டும் என்று சொன்னார். அப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எது நடந்துவிடக்கூடாது என்று நினைத்தாரோ அதெல்லாம் வரிசையாக, வேகவேகமாக நடந்தது. எல்லாவற்றையும், பேச்சுவார்த்தை, விவாதங்கள் மூலம் தீர்க்க நினைத்தவர் அவர். ஆனால், ரத்தக்கறை கொண்டவர்கள் மரணத்துக்குப் பிறகு நடத்த வேண்டிய அஞ்சலிக் கூட்டங்களிலேயே ஆர்வமாக இருந்தார்கள். அந்த வரலாறு இது.
இந்துஸ்தான், பாகிஸ்தான், ராமராஜ்யம் என்ற வார்த்தைகள் இந்திய அரசியலில் நேற்று ஏற்படுத்திய தாக்கத்தை காந்தியின் மூச்சுக்காற்று மூலமாக விவரிக்கிறது இந்நூல்.