பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்

பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்
மாலவன் அலங்காரப் பிரியன். அலங்காரப் பிரியனுக்கு உற்சவங்களும் ஏராளம். உலாக்களும் தாராளம். நம்மிடையே மிகவும் பிரபலமான ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி போன்ற திருத்தலங்களில் வெகு விமரிசையாகப் பிரம்மோற்சவம் போன்ற திருவிழாக்களும், வைபவங்களும் நடைபெறுவதை வருடம் தப்பாமல் கண்டு களித்துதான் வருகிறோம். ஆனால் இந்தப் பிரதான வைணவத்தலங்களுக்கு இணையாகவே வேறு பல திருமால் கோயில்களிலும் சம்பிரதாய விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுதான்வருகின்றன. அந்நாட்களில்தான் என்ன ஒரு கோலாகலம், பக்தர்களிடையே ஆன்மிக நெகிழ்ச்சி... திருமாலுக்கும், அவனுக்குத் தம்மையே அர்ப்பணித்துச் சேவை செய்து பெருமைப்பட்ட அடியார்கள் சிலருக்கும் வைணவ ஆலயங்களில் நடக்கும் விழாக்களின் விளக்கமான தொகுப்பே இந்த நூல்.
வைணவத்தின் மீது மிகுந்த பற்றும், பக்தியும் கொண்டவரும், பல பத்திரிகைகளுக்கு அவர்கள் கேட்ட மாத்திரத்திலேயே வைணவக் கோயில்கள் பற்றிய அரிய புகைப்படங்களையும், செய்திகளையும் வாரி வழங்கும் திருமால் சேவகர், திரு. எம்.என்.ஸ்ரீநிவாசன் அவர்கள் அந்த வழிபாட்டுத் தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார். இவரது குறிப்புகளை ஆதாரமாக வைத்துக்கொண்டே பல பெருமாள் திருத்தலங்களைத் தரிசித்த பக்தர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். தான் கண்டதை, தான் உணர்ந்ததை, தான் படமாகப் பிடித்ததையெல்லாம் சேர்த்து ‘பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்’ என்ற சிறப்பானதொரு நூலை ஆக்கியிருக்கிறார். பாற்கடல் போன்ற அவரது வைணவத் தகவல் சேகரிப்புக்கு, இந்த நூல் ஒரு துளி எனவே கூறலாம்.
ஆன்மிக அன்பர்கள் அனைவரும் படித்து, பரவசப்பட வேண்டிய நூல் இது. தாங்கள் பார்த்து அனுபவித்த விழாக்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரவும், புதிதாக இந்நூல் ஆதாரத்தில் குறிப்பிட்ட தலங்களுக்குச் சென்று விழாக்களைப் பார்த்து மகிழவும் முடியும்; ஆன்மிக அருஞ்சுவையை அள்ளிப் பருகவும் முடியும்.