காட்டாயி

காட்டாயி
வடசென்னையின், குறிப்பாக காசிமேட்டு கடற்கரையின் உப்புக்காற்று தழுவும் மனிதர்கள் தான் எப்போதும் என் முதல் பேசுபொருட்கள். இத்தொகுப்பிலும் காட்டாயி மற்றும் சந்திரா என்ற இருபெண்கள் சங்க இலக்கியத்தின் அகம்-புறம் போல வடசென்னையின் இருவேறு பெண் நிலைகளை பிரதிபலிப்பவர்களாக எழுந்து நிற்கின்றனர். கலைடாஸ்கோப்பில் எண்ணற்ற உருவங்களாய் பிரதிபலிக்கும் ஆடிப்பாவைகளாய் என்னுள் நிறைந்திருப்பவர்கள் இவர்கள்.
பூத்துக் குலுங்கும் செடியை வேரொடு பிடுங்கி வேறொரு நிலத்தில் நட்டபின் அது எதிர்கொள்ளும் தத்தளிப்பு தான் பிற கதைகள். வடசென்னையில் இருந்து இடம்பெயர்ந்து நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத தலைப்பிரட்டை பகுதியொன்றில் எதிர்கொண்ட சம்பவங்கள் பிற கதைகளின் கருவாக அமைந்துள்ளன. இந்த மனிதர்களின் முகங்களும், குணங்களும் தந்த ஆச்சர்யங்களும், அதிர்ச்சிகளும் சொல்லி மாளாதவை. அவற்றின் சிறுதெளிப்பே இக்கதைகள்.