முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி
முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி கடைசியாக ஒரு மந்திரஜாலம் செய்துகாட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
மீண்டும் இன்னொரு மந்திரஜாலம் செய்து காட்ட வேண்டாத அளவு அட்டகாசமான மந்திரஜாலமாக அது இருக்க வேண்டும் என்பதே அவனது நோக்கம். பின்னட்டை குறிப்பை படித்ததனாலேயே இந்தப் புத்தகம் அபாரமானது என்று வாசகர்களுக்கு ஓர் எண்ணம் வரவேண்டும் என்பதே அந்த மந்திரஜாலம்.
முன்பொரு காலம் என்றால் அது வரலாற்றின் முன்பொரு காலம் அல்ல. வரலாற்றில் மந்திரஜாலத்தின் காலம் என்று ஒரு காலமே கிடையாது. உலகின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்கள் யாரைக் கேட்டாலும் அவர்களும் இதையேதான் கூறுவார்கள். அப்போது இக்கதைகள் கூறும் முன்பொரு காலம் வாசகர்களின் மூளைக்குள்தான் இருக்க முடியும்.
அங்கு அவர்கள் எதற்கு மந்திரஜாலம் நிகழும் விதிகளுள்ள ஒரு பிரபஞ்சத்தை சுமக்கிறார்கள் என்று மந்திரவாதிக்கு ஒரு சந்தேகம்.
அவர்களது அந்தப் பிரபஞ்சத்தை அவர்களுக்கே தருவதே இந்தப் பின்னட்டையின் மந்திரஜாலம். ஒரு நாணயத்தைப் போல் முன்னும் பின்னுமாக ஒரு புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பவர்கள் மந்திரஜாலத்தால் ஏமாறுவது நியாயம்தான்.