எவரும் செய்யலாம் ஏற்றுமதி

எவரும் செய்யலாம் ஏற்றுமதி
யார் அதிகமான தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்களேர், அவர்கள் மற்றவர்களை விட அதிகமாக அல்லது எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இது இன்று எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும், என்றாலும் இது வணிகத் துறையில் அப்பட்டமாக வெளியே தெரியும் உண்மை..
வணிகம், ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், பொருளைத் தகுந்தவாறு பதப்படுத்தல். உரிய முறையில் பாக்கிங் செய்தல், அரசின் சட்ட திட்டங்கள். வங்கி நடைமுறைகள், அன்னியச் செலாவணியின் மாற்று விகிதங்கள், கப்பல் அல்லது விமான அட்டவணைகள், இன்சூரன்ஸ் குறித்த தகவல்கள். பொருளை இறக்குமதி செய்பவரின் பின்னணி, அவர் நாட்டின் பொருளாதார நிலை, ஏன் அரசியல், தட்பவெப்ப நிலைகூட, இப்படி ஏற்றுமதித் தொழிலின் ஒவ்வொரு கட்டத்திலும் தகவல்கள் அவசியமாகின்றன.
இந்தத் தகவல்களை எங்கு பெறுவது, எப்படிப் பெறுவது எனத் தெரியாமல் தவிப்பவர்கள் ஏராளம்.
இன்னொருபுறம். உலகமயமாதலின் விளைவாக வர்த்தகத்திற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. துடைப்பத்திலிருந்து தங்க ஆபரணங்கள் வரை பல வகையான பொருட்கள் ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கின்றன, ஆனால், அந்த வாய்ப்புக்களை நம் தமிழ் இளைஞர்கள் பெருமளவு பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்குப் பல காரணங்கள். அவற்றில் முக்கியமானது போதுமான அளவு தகவல்கள் கிடைக்கப் பெறாதது. கிடைக்கும் தகவல்களும் ஆங்கிலத்தில் இருப்பது.
இந்தத் துறையில் வல்லுநரான அரிதாசன் மிகுந்த அக்கறையோடு. அரிய தகவல்களை எளிய நடையில் சாமானியருக்கும் புரியும் வகையில் 'புதிய தலைமுறை இதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தக் கட்டுரைகளைப் படித்து வந்த இளைஞர்கள் முன்னேற்றப் பாதையில் பீடு நடைபோட்டு வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே, எவ்வளவு பயனுள்ள நூல் இது என்பதைச் சொல்லும், தங்களுக்கு இந்தக் கட்டுரைகள் எந்த அளவு பயனளித்தது என்பதை பயனாளிகளின் குரலிலேயே நீங்கள் இந்த நூலில் வாசிக்கலாம்.