உணவின் வரலாறு
உலகம் நீராலும் காற்றாலும் ஆனது. ஆனால் உயிர்கள், உணவால் மட்டுமே ஆனவை.
மனித குலம் தோன்றிய வினாடி முதல் இன்று வரை நமது எல்லா தேடல்களுக்கும் அடிநாதமாக இருப்பது பசியும் ருசியும் மட்டும்தான்.
உணவு என்ற ஒன்று இல்லவேயில்லை என்றால் நாம் இருப்பது சாத்தியமில்லை. மனிதனின் வரலாறு என்பது உணவின் வரலாறோடு பின்னிப் பிணைந்தது. முதலில் பசிக்காக சாப்பிட்டார்கள். பிறகு விளைந்ததைச் சாப்பிட்டார்கள். அதன்பின் வினைவித்துச் சாப்பிடக் கற்றார்கள். விதவிதமான உணவு வகைகள். ஊருக்கு ஊர், தேசத்துக்கு தேசம், கண்டத்துக்குக் கண்டம் மாறுபடும் உணவுகள். அவற்றின் ருசி.
இந்த நூல், மனிதனின் முதல் தேவையாகவும் மூலாதாரத் தேவையாகவும் உள்ள உணவின் வரலாறைச் சொல்கிறது. குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக இது வெளிந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது. பிறகு நூலாக வெளிவந்து பல பதிப்புகள் கண்டது.
உண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்?
பசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான்? மது எப்படிப் பிறந்திருக்கும்? ஆரியர்கள் சோம பானத்தைக் கொண்டு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணில் பீரைப் போன்றதொரு பானம் இருந்திருக்கிறது. அதைப் பற்றித் தெரியுமா?
உணவின் கதை என்பது உயிரினங்களின் கதையைக் காட்டிலும் சுவாரசியமானது. புதிர்கள் நிறைந்தது. உணவு இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. மனிதனின் கற்பனைத் திறன் உனவுக்கு ருசியைச் சேர்த்தது. ருசி சேரச் சேர அதற்குச் சிறகு முளைத்தது.
நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, தோசையில் இருந்து மேற்கத்திய உணவு வகைகள் வரை ஒவ்வொன்றும் தோன்றி, வளர்ந்து உருக்கொண்ட வரலாற்றை திகைப்பூட்டக் கூடிய தகவல்களுடன் விவரிக்கிறார் பா. ராகவன். உணவு இயல் என்றாலே சமையல் குறிப்புகள்தான் என்றிருந்த தமிழ் வாசக மனப்பதிவை முற்றிலும் மாற்றியமைத்த நூல் இது.