திரட்டுப்பால்
திரட்டுப்பால்
கரவாழ் மத்தியத் தர வர்க்கம் என்பது படைப்புக்கான தலைக்காவிரி. தொடும் இடங்கள் எல்லாம் பாத்திரங்களும் காட்சிகளும் நிறைந்தவை. வலிகளுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் நிராசைகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களும் இந்தக் காவிரியில் இருந்து சிறுக சிறுக முகர்ந்து வழங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜூ வழிவந்தவரான ஆர்.வெங்கடேஷும் அதே முயற்சியையே இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார்.
நேரடி சம்பவங்களோடு, மனவோட்டம் சார்ந்த சொற்சித்திரம் தீட்டும் பாணியைப் பின்பற்றும் ஆர்.வெங்கடேஷ், எங்கும் குரல் உயர்த்திப் பேசுவதில்லை. வாழ்க்கையின் சில துண்டுகளை இணைத்து, கோவையாக்குவதன் வாயிலாக, கதாபாத்திரங்களில் உள்ளூர ஊசலாடும் மனச்சிக்கல்களுக்கு, எழுத்து வடிவம் தர முயற்சி செய்துள்ளார்.
மத்தியத் தர வர்க்கத்தின் மீதான எந்தவிதமான விமர்சனத்தையோ, தீர்ப்புகளையோ முன்வைக்காமல், அதன் போக்கை முடிந்தவரை அப்படியே பதிவு செய்வது, ஆர்.வெங்கடேஷின் பாணி. நீங்கள் அறிந்த உலகத்தையே, உங்களுக்கு மலர்த்திக் காட்டும் இந்தச் சிறுகதைத் தொகுதி.
ஆர்.வெங்கடேஷ் - கணையாழி இதழின் மூலம் அறிமுகமானவர். எழுதவந்து 34 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 2 கவிதைத் தொகுதிகள், 2 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுதிகள் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இராஜாஜி, ஆதவன் ஆகியோரது இலக்கிய பங்களிப்புகள் பற்றி, சாகித்ய அகாதெமிக்காக சிறுநூல்கள் எழுதியுள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வழங்கிய எழுத்துத் துறைக்கான ‘நம்பிக்கை நட்சத்திரம்’ விருது, கலைமகள் நாராயணசாமி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இது இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுதி.
திரட்டுப்பால் - Product Reviews
No reviews available