தாரா... தாரா... தாரா...

தாரா... தாரா... தாரா...
உரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நாவல் வரிகளில் உலாவ விட்டார்கள். ஏன், நாமும்கூட முகம் தெரியாத யாரோ ஓர் எழுத்தாளனின் படைப்புகளில், ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்துகொண்டு இருக்கலாம்; வாழ நேரலாம்.
இப்படி உண்மை நிகழ்ச்சிகளை, கற்பனை கலந்து தனக்கே உரிய விறுவிறு நடையில் கதைகளில் புகுத்தி வாசகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் புஷ்பா தங்கதுரை.
இவர் எழுதிய தாரா... தாரா... தாரா... ஆனந்த விகடனில் 1982ல் தொடராக வெளியானபோதே நிறைய வாசகர்களை தன் வசப்படுத்தியிருந்தது. நாவலைப் படித்தவர்கள், முகம் தெரியாத யாரோ சிலரால் நாமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்..! என்று உணர்ந்தனர். இப்படியெல்லாம்கூட நடக்குமா..? என்றும் வியந்தனர்!
பெண்களை மையப்படுத்தி எழுதிய நாவல்களின் வரிசை நீளமானது! அந்தவகையில், இந்த நாவலின் மையமும் ஒரு பெண்ணை முன்னிறுத்தியே நகர்கிறது. பல்வேறு திருப்பங்கள் உடைய நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்க்கையைப் போல இந்நாவலின் பக்கங்கள் முழுக்கவும் சுவாரஸ்யங்கள் விரவிக் கிடக்கின்றன.