தமிழரின் சமயங்கள்

தமிழரின் சமயங்கள்
தமிழரின் மதங்கள் - வேத காலம், சங்க காலம், சாம்ராஜ்ஜிய காலம் ஆகியவற்றில் எவ்வாறெல்லாம் இருந்தன, மாறின என்பதைப் பற்றி ‘தமிழரின் மதங்கள்’ நூலில் குறிப்பிட்டிருந்தார் நூலாசிரியர் அருணன். இந்த நூலில், நாயக்கர் காலம், ஆங்கிலேயர் காலம், நவீன காலம் என மூன்று காலகட்டத்தில் தமிழரின் சமயங்கள் எவ்வாறெல்லாம் வளர்ந்தன, சிதைந்தன, பரப்பப்பட்டன என்பதைப் பற்றி ஆய்வு நோக்கில் ஆய்ந்திருக்கிறார். கிறிஸ்தவ மதம் தமிழர்களிடையே எவ்வழியில் எவ்வாறெல்லாம் பரப்பப்பட்டது, இஸ்லாம் மதத்தினர் அவ்வாறு தங்கள் மதத்தைப் பரப்ப ஏன் முனைப்புக் காட்டவில்லை, பெரு தெய்வ வழிபாட்டு முறையிலிருந்து விலகி, நாட்டார் தெய்வ வழிபாடு முறை ஏன் தோன்றியது எனவும் விளக்கியிருக்கிறார். இந்து மதத்தில் ஆகமக் கோயிலில் தெய்வ வழிபாட்டுக்கு சைவப் படையல் என்றால், நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கு அசைவப் படையல்- ஆனால் இரண்டும் நிகழ்வது இந்து மதத்தில்தான். இந்த வேறுபாடு ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றி தக்க தர்க்கங்களுடனும் கூறுகிறது இந்த நூல். தமிழரின் மதங்களைப்பற்றித் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும்!