மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெய்ப்பொருள் காண்பது அறிவு
மனிதன் அதிகம் யாசிப்பது நிம்மதி என்ற பெரும்பேற்றைத்தான். அதற்காக மனிதன் நோக்கிச் செல்லும் மார்க்கம் அவனுக்கு பெருவாழ்வை அளிக்கிறதா? மதங்களைக் கடந்த மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமா? அத்தகைய பெருவாழ்வு சாத்தியம் என்கிறது மெய்வழிச்சாலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் இருக்கும் அன்னவாசல் கிராமத்தில் இருந்து வடக்கே 5 கி.மீ-ல் இருக்கிறது இந்த மெய்வழிச்சாலை. இந்த மெய்வழிச்சாலை என்பது மதமா? ஆம், இது எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். திரு. காதர் பாட்சா என்பவர் 1922-ல் ஆரம்பித்த மார்க்கம் இது. பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. ஐந்து வேளை இறைவனை கும்பிடுதல் அல்லது தொழுதல் இங்கு நடக்கிறது. தலையில் தலைப்பாகை கட்டிக்கொள்வது, பஞ்சகச்சம் அணிந்து கொள்வது, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக்கொள்வது போன்ற சமய சடங்குகள் நிறைந்துள்ளன. இந்த மதத்தை தோற்றுவித்த ஸ்தாபகரை ‘சாலை ஆண்டவர்’ என மெய்வழி அன்பர்கள் அழைக்கிறார்கள். இவருக்கு பல அதீத சக்திகள் நிறைந்திருந்ததாக நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் இவர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியவர். ஜீவசமாதி அடைந்த இவரை பின்பற்றுபவர்கள் மெய்வழிச்சாலையை வழிநடத்துகிறார்கள். மெய்வழிச் சாலை சடங்குகளும், சம்பிரதாயங்களும் புதிராகவே உள்ளன என்று சொல்பவருக்கு இந்த நூலில் விளக்கம் சொல்கிறார் நூலாசிரியர் கே. நிறைமதி அழகன். மெய்வழிச் சாலையின் தகவல்களை அறிந்து கொள்ள... பக்கத்தைப் புரட்டுங்கள்.