மனித சிந்தனை வளம்

மனித சிந்தனை வளம்
தனி மனிதர்களின் நிழல்தான் சரித்திரம் என்று எமர்ஸன் என்கிற அமெரிக்க ஞானி ஒரு இடத்தில் கூறினார். சரித்திர காலத்திலே பல தனி மனிதர்களின் சிந்தனைகளும் சாதனைகளும் சிறப்பாக நமக்குத் தெரிகின்றன. மக்களுக்கு நீதி என்றால் என்னவென்று நிர்ணயித்து முதல் முதலாகக் கூற முயன்ற கம்முரபி என்கிற பாபிலோன் நகரத்து மன்னன் முதல், மனித சுபாவத்தையே மாற்றி ஹிம்சையைத் துறந்து அஹிம்சையை வாழ்க்கை வழியாகக் கொள்ள முடியும் என்று சொல்லிச் செய்து காட்டிய நமது மகாத்மா காந்தி வரைக்கும், எத்தனையோ எண்ணிக்கையற்ற கடவுள்களை நம்பித் துதித்துக்கொண்டு நின்ற மனிதனுக்கு, ஒன்றே கடவுள் என்று சொன்ன அகனெடான் என்கிற அபூர்வ எகிப்திய ஃபாரோ; முதல் மனிதன் உலகில் தோன்றிய காரண காரியங்களை உடற்கூறு ஞான பூர்வமாக அலசி உலகை ஏற்க வைத்த சார்லஸ் டார்வின் வரையில், ஒன்றே கடவுள் அவன் பிரஜைகள் நாம், அவன் விதிகள் இவை – எனக்குச் சொன்னான் என்று சொன்ன மோஸஸ்; முதல் மனிதனின் மனத்தின் அடிப் பிரக்ஞையைத் தைரியமாக ஆராய முற்பட்ட ஸிக்மன்ட் ஃப்ராயட் வரையில், புண்ணியத்தையும், பாவத்தையும் அதன் காரணமாக எழுந்த சுவர்க்கத்தையும், நரகத்தையும் அற்புதமான சிந்தனை மாளிகைகளாக எழுப்பித் தந்த ஜரதுஷ்டிரன் முதல்; நீள, அகலம், கனம் கூட உறவு முறைகளால் ஏற் படுவதே என்று நிரூபித்த எயின்ஸ்டீன் வரையில், பல மனிதர்கள் உலகில் பல பாகங்களிலும் தோன்றி, இன்றைய மனித குலத்தின் சிந்தனை வளத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராக எடுத்துக்கொண்டு இங்கு சொல்ல முயலுவேன்.
க.நா.சு