குட்டி ரேவதி கவிதைகள் - தொகுதி 1

குட்டி ரேவதி கவிதைகள் - தொகுதி 1
செயலின்பம், விடுதலை ஊக்கம், அழகு என்னும் பேறுநிலை – இவை குட்டி ரேவதி கவிதைகளின் நித்திய அகவிசைகள். இந்தியச் சூழலில் வர்ணமயப்படுத்தப்பட்ட சாதியுடலை, சமூக, பால்நிலை – அதிகார மரபுகள் வழி வரையறுக்கப்பட்ட மொழியுடலை இக்கவிதைகள் மற்றமைகள் நோக்கி, பேரண்டம் நோக்கி – விடுதலை செய்கின்றன. ஒரு தனிப்பட்ட சுயத்தின் குரலாக அல்லாமல், தன்னிலிருந்து ஆதிப் பெண் வரையான புதைப்படிவங்கள் தேடி, பெண் எனும் மொத்தப் பிரபஞ்சத்தின் கூட்டு உடல்களையும் அதன் அறிதல்களையும் அகழ்ந்து வருகின்றன. காதல், புணர்ச்சி
எல்லாம் வரலாற்று கதியிலிருந்து விடுவிக்கப்பட்டு இயற்கையின் ஞானத்திலும் இசைமையிலும் வைக்கப்பட்டுள்ளன. சூரியன், கடல், வானம் எனப் பிரபஞ்சத்தின் பூரணத்துவம் வாய்ந்த நித்திய படிமங்களோடு இக்கவிதைகள் வேட்கையுடன் உரையாடுகின்றன. சூழலியல், ஈழம், மானுட உரிமைகள் எனக் காலத்தின் சமூக உடலாகி வலியும் மீட்சியும் கொண்டு துடிக்கின்றன. குட்டி ரேவதி கவிதைகளின் மொத்தத் தொகுப்பான இந்த நூல், காலத்தின் மீதான அதிர்வு என்பதாக மட்டுமல்லாது தன்னளவில் நிறைவான மாற்று மெய்ம்மையை, ஒரு மெய்த்தளத்தை உருவாக்கியுள்ளது.