கோணல் பக்கங்கள் 2

கோணல் பக்கங்கள் 2
சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள்
ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின்
ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள்
வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்கும் மீன்கள், நத்தைகள்
(திருவனந்தபுரத்தில் திரைப்பட விழாவில் ஒரு கள்ளுக்கடையில் சாரு எனக்கு நத்தைகளைப்
பதப்படுத்தி உண்ணக்கொடுத்தார். நாக்கில் இன்னமும் நத்தைகளின் ருசி), பழங்கள், பன்றிக் கறி,
இசை, இலக்கியம், குடி, நடனம், ஒழுக்க விதிகளை உடைத்தெறியும் பாலியல் என காட்டு ஞாபகமே
இந்தப் பக்கங்களில் கிளை விரிக்கிறது.
சாருவின் எழுத்துக்குள் தமிழ் landscape அதன் கவுச்சி வாசத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சாருவின் எழுத்துக்குள் உள் நுழைந்தால் நூற்றாண்டுகளுக்கும் முன்பு கள்
குடித்துக்கொண்டிருக்கும் சங்கப் புலவர்களில் சென்று முடியும். யாழிசைக்கும் பாணர்களும்,
நடனமாடும் விறலியர்களும் நிறைந்த தீ எரியும் கூடாரங்களின் மஞ்சள் வெளிச்சப் பின்புலத்திலிருந்து
சாரு ஒரு modern text ஐ எழுதிக்கொண்டிருக்கிறார். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வந்த அறவியல்
அவர் குடித்து முடித்த காலி புட்டிகளில் அடைபட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.
சாருவின் fictional worldல் இருந்து என்ன கிடைக்குமோ அதேதான் இந்தக் கோணல் பக்கங்களில்
இருந்தும் கிடைக்கிறது.
- நா. முத்துக்குமார்