காந்தியின் தாடை

காந்தியின் தாடை
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள், பலராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத மனிதர்களின் அறியாத அந்தரங்கப் பக்கங்களைப் பேசுகின்றன. அப்படித்தான் இத்தொகுப்பில் ஒரு ரயில் பைலட் சில தற்கொலைகளுக்கும் கொலைகளுக்கும் சாட்சியாகிப் போகிறார். ஏமாற்றிய கடவுளைக் கொலைகாரனாக்கி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார் மனநலம் பிறழ்ந்த ஒருவர். காலில் கட்டப்பட்ட சங்கிலியை அறுத்து எறிய முடியாமல் ஊமத்தம் பூக்களைக் கையிலேந்தியபடி மழையில் தொலைகின்றன சில பித்து மனங்கள். காதலிகளின் திருமணத்துக்குத் தயாரான பரிசுப் பொருட்கள் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கின்றன எழுதப்படாமல் மிச்சமிருக்கும் டைரியின் பக்கங்களில். துதிக்கை உயர்த்தி யாசிக்கும் உலகின் கடைசி யானையின் விழி ஓரத்தில் மன்னர்களின் துரோகங்கள் முறிந்து போகின்றன. செஞ்சோற்றுக் கடன் ஒன்று இடுகாட்டின் கடைசி நொடியில் தீர்க்கப்படுகின்றது. துரோகத்தின் பொருட்டு நிகழ்த்தப்படும் கொலைக்குப் பின்னால் வாழும் சில பஞ்சுமிட்டாய் மனங்களின் கண்ணீரில் உப்பு இனிக்கிறது. பால்யத்தில் பூத்த மீசையின் அணைப்பில் கட்டுண்டு கிடக்கிறது அறியா மனதின் அலறல் ஒன்று. சாபத்தின் கனவில் பாரதப் பெண்மை ஒன்று திக்கின்றி தொலைகிறது. இவர்கள் வாழும், வாழ்ந்த உலகில் நாமும் வாழ்கிறோம் என்ற சிறு சலனத்தை உண்டாக்கிச் செல்லும் இக்கதைகள் குற்ற உணர்வின்பால் தொலைக்கப்பட்டுவிட்ட இரவுகளில் எழுதப்பட்டவை.