எக்ஸைல்

எக்ஸைல்
சாருவை ஒருவர் ஏற்கலாம், நிராகரிக்கலாம். ஆனால் புறக்கணிக்க முடியாது. 30 ஆண்டுகள் தொடர்ந்து இலக்கிய வாதியாக,கருத்தியலாளாராக சாரு முன்வைக்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் தீவிரமானவை. சமுகத்தின் ஒடுக்கப்பட்ட மனசாட்சியின் குரலாக ஓர் எழுத்தாளன் தொடர்ந்து இயங்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துபவை. பொதுப் புத்தியில் உறைந்து கிடக்கும் மனோபாவத்தை எதிர்க்கும் குரலாக சாருவின் எழுத்து ஒலிக்க தொடங்கும் போதே அதனை ஒட்டியும் வெட்டியும் விவதாம் ஒன்று தொடங்கிவிடுகிறது. இது தமி்ழ் எழுத்துலகுக்கும் சமுகத்துக்கும் தேவையான ஒன்று. அந்த வகையில் சாரு இலக்கியவாதிகளில் ஒரு கலகக்காரர். கலகக்காரர்களில் ஓர் இலக்கியவாதி.
உலகளவில் நாவல் கட்டமைப்பு குறித்து நிகழ்ந்துவரும் மாற்றங்களை எப்போதுமே துல்லியமாக இனம் காணக்கூடியவர் சாரு. Autofiction என்னும் வகையில் உலக மொழிகளிலேயே ஒன்றிரண்டு பேர் மட்டுமே எழுதுகிறார்கள். தமிழில் இதனை வெற்றிகரமமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. அந்த வகையில் Autofiction நாவலான எக்ஸைல் உலக இலக்கியத்திலும் ஒரு முக்கியமான .இடத்தைப்பிடிக்கிறது.
காலம்,வெளி இரண்டிலும் முடிவற்ற சாத்தியத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்நாவல். வீரிய விருந்து லேகியம் தயாரிப்பதிலிருந்து, வசிய மருந்தை விளக்குவதுவரை, பணம் சம்பாதிப்பதிலிருந்து நவீன காலக்கட்டங்களில் பல்வெறு சங்கதிகள் வரை விரியும் இந்நாவலின் பின் சரடு மிக மக்கியமானது. நம் அகத்தோடு தொடர்பு உடையது. தமிழ் சித்தர் மரபையும் இந்திய ஞான மரபையும் சொல்லிச் செல்லும் பகுதிகளில், இந்நாவல் தொட்டுச் செல்லும் உயரங்களில் முக்கியமானதும் உன்னதமானதுமாகும். இந்நாவலை இப்படிதான் என்று வகைப்படுத்துவதைவிட, இந்நாவலே ஒரு புதிய வகைமாதிரியானது என்பதைத்தான் எக்ஸைல் முன்வைக்கிறது.