எதிர் அரசியல் சினிமா(நிழல்)

0 reviews  

Author: ரதன்

Category: சினிமா

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எதிர் அரசியல் சினிமா(நிழல்)

உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்பைக் லீயின் ‘மால்கம் X’ திரைப்படத்தைப் பார்த்தவர்கள், கறுப்பினத் திரைப்படம் எப்படி ஒரு அரசியல் ஆயுதமாகப் புதிய இயக்குநர்களிடம் கைவரப்பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்று உலக அளவில் மாற்றுத் திரைப்படம், இணை திரைப்படம், கலை திரைப்படம் ஆகியவை அரசியல் திரைப்படம் என்கிற ஒடுக்கப்பட்டவர்களின் குரலை முன்வைப்பதாக மாறியுள்ளன. இந்திய, தமிழ் சினிமாவில் தலித் சினிமா என்ற வகை உருவாகியிருப்பதைப் போல, உலக அளவில் கறுப்பின அரசியலை முன்வைக்கும் எதிர் அரசியல் சினிமாக்கள் உருவாகிவருகின்றன.

எதிர் அரசியல் திரைப்படங்கள் குறித்த கவனம் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது. அதை முழுமையாகக் கவனப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இந்நூல். ‘நிழல்’, ‘காலச்சுவடு’, ‘இனியொரு’, ‘அகழ்’, ‘தாய்வீடு’ போன்ற இதழ்களில் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு இது. கறுப்பினத் திரைப்படங்கள், அரசியல் திரைப்படங்கள் குறித்து மெக்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சொர்ணவேல் எழுதியுள்ள முன்னுரை விரிவான அறிமுகத்தைத் தருகிறது. அவரது துறை சார்ந்த அனுபவங்களும் கறுப்பினத் திரைப்படங்கள் குறித்த பட்டியலும், அவை குறித்து அவர் தரும் அறிமுகமும் இந்நூலை வாசிப்பவர்களுக்குத் துணைபுரிகின்றன.

சில கட்டுரைகள், தனியான ஒரு திரைப்படம் குறித்து விரிவான பார்வையை முன்வைக்கின்றன. சில கட்டுரைகள் பேசுபொருளை அல்லது அரசியல் பார்வையை மையமாக வைத்து, தொடர்புடைய திரைப்படங்களைத் தொகுத்துப் பேசுகின்றன. “கறுப்பின மக்களின் வாழ்வியலை முன்வைத்து வெளிவந்த படங்கள் மூன்று முக்கிய காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றன” என்று கூறும் ரதன், ஆப்பிரிக்க மக்கள் அமெரிக்க மண்ணை அடைந்தது, அதன்பின் அவர்கள் நடத்தப்பட்ட விதம், இன்றைய நிலை ஆகியவற்றையும் அவை எப்படித் திரைப்படங்களில் பதிவாகியுள்ளன என்பதையும் விவரிக்கிறார்.

1839-ம் ஆண்டு ‘அமிஸ்டாட்’ என்ற கப்பலில் ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டதை விவரிக்கும் திரைப்படம் குறித்து ரதன் எழுதியுள்ளார். ‘12 Years A Slave’ என்பது அடிமை ஒருவரின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு, கறுப்பின இயக்குநரால் எடுக்கப்பட்ட திரைப்படம். ஹாலிவுட் படங்களின் கறுப்பின முரடர்கள், வில்லன்கள் என்கிற சித்தரிப்புக்கு மாறாக, கறுப்பின அடிமைகளின் தனித்தன்மையைக் காட்டிய திரைப்படம் இது என்பதை ரதன் எடுத்துக்காட்டியுள்ளார். 2018-ல் ஆஸ்கர் விருதுபெற்ற ‘Green Book’ எப்படி ஒரு வெள்ளையின மீட்பரின் கதையாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் அரசியலை ரதன் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தமிழ், மலையாளம், சிங்களம், கொரியன், லெபனான், இஸ்ரேல் அரசியல் திரைப்படங்களையும் இந்த நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார். போருக்குப் பின்பு இலங்கைத் தமிழர்கள் எடுத்த படங்கள் குறித்து விரிவான கட்டுரை ஒன்று உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி கொல்லப்பட்டதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட வரலாற்றுப் படம் குறித்து எழுதும்போது, போரை முன்வைத்து எடுக்கப்படும் படங்கள் போரை உருவாக்கும் அரசுகளை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்கிறார். இந்நூல் தமிழ்த் திரைப்பட வாசகர்கள், இளம் இயக்குநர்கள், திரைப்பட ஆர்வலர்கள் போன்றோரிடையே புதிய விஷயங்கள் பலவற்றின் அறிமுகத்தையும், திரைப்படத்தின் திரைவடிவம் மற்றும் அதன் உள்ளடக்க அரசியல் போன்றவை குறித்த கவனத்தையும் உருவாக்கும்.

எதிர் அரசியல் சினிமா(நிழல்) - Product Reviews


No reviews available