என்ன எடை அழகே!

என்ன எடை அழகே!
குங்குமம் தோழி’ இதழில் வெளியானபோது பல ஆயிரம் பெண்களை ஈர்த்த ‘என்ன எடை அழகே!’ எனும் எடைக் குறைப்பு ரகசியங்கள் தொகுக்கப்பட்டு இந்தப் புத்தகமாக வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் எடைக் குறைப்புக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. பெல்ட் கட்டினால் வயிறு குறையும் என்று கூட கூசாமல் சொல்கிறார்கள். பெல்ட் மட்டுமல்ல... காந்த சிகிச்சை, கல் சிகிச்சை, அது இது என போலிகள் பலருக்கு இது ஒரு தந்திர பிசினஸும் கூட!
மருத்துவமனைகள், பியூட்டி பார்லர்கள், எடைக் குறைப்பு சிறப்பு நிலையங்கள், ஜிம், உடற்பயிற்சி நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர், அறுவை சிகிச்சைகள், மருந்துகள், மாத்திரைகள், க்ரீம்கள், பெல்ட்டுகள், எடைக் குறைப்பு சாதனங்கள்(டிவி மூலம் விற்கப்படுபவை), இணைய விளம்பரங்கள் என சகலமும் சேர்ந்து இத்துறையில் ஒவ்வோர்
ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன.
எப்படியாவது எடை குறைத்தே தீர வேண்டும் என நினைக்கிற பலரும், பலப்பல வழிமுறைகளை நடைமுறைப்படுத்திப் பார்க்கிறார்கள். ஆனாலும், எடை குறைந்தபாடில்லை.
எடைக் குறைப்பு என்பது ஓர் அறிவியல் வழிமுறையே. அதன்படி, பிராக்டிக்கலாக எடை குறித்த பிரபலங்களின் அனுபவங்கள் இந்நூலுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. அவை நிச்சயம் உங்கள் ஆர்வத்தைத் தூண்டும். பிரபலங்கள் மட்டுமல்ல... மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள், உணவு - ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆகியோரும் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள். எடை குறைத்து இனிதே வாழ நல்வாழ்த்துகள்!