பாரதியார் சரித்திரம் (பாரதி புத்தகாலயம்)

பாரதியார் சரித்திரம் (பாரதி புத்தகாலயம்)
பாரதி என்றொரு கவிஞன் தமிழ்நாட்டு மண்ணில் 39 ஆண்டு காலமே வாழ்ந்தான். அந்தக் குறுகிய காலத்துக்குள் அவன் சாதித்தவை ஏராளம். கவிதைகள், காவியம், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, இதழியல், கார்ட்டூன், சிறுகதை என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்து விட்ட மகாகவி பாரதி. பாரதியின் வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்து, ‘அவன் காரியம் யாவினும்’ கைகொடுத்த செல்லம்மாள், தன் கணவருடைய வரலாற்றைப் பேசுமொழியில் படைத்துத் தந்திருக்கிறார். ‘கவியோகி’ எனப் புகழப் பெறும் சுத்தானந்த பாரதியின் முன்னுரையுடன் 102 பக்கங்களே கொண்ட இந்த நூலில் 37 தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளாக அமைக்கப்பட்டுள்ளன. படிப்பறிவு மிகக் குறைவாகப் பெற்றிருந்த ஓர் எளிய கிராமத்துப் பெண், தனது கனவுகளெல்லாம் நிராசையாகி நொறுங்கிப் போன போதும் தொடர்ந்து பாரதிக்கு ஈடு கொடுத்து வந்திருப்பதை இந்த நூலைப் படிப்போர் உணர முடியும்.