அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி
எல்லா கடவுள்களும் அன்பையே போற்றுகிறார்கள்; எல்லா மதங்களுமே சக மனிதர்களை நேசிக்குமாறுதான் போதனை செய்கின்றன. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற உண்மையை மறந்து, இறுக்கமான சம்பிரதாயங்களுக்குள் வழிபாடுகள் சென்று சிக்கிக்கொள்ளும்போது, கடைத்தேறும் வழி புரியாது மக்கள் திணறிப் போகிறார்கள். கடவுளே செய்வதறியாது திகைத்துப் போகிறார். இப்படிப்பட்ட இறுக்கமான சூழல் சமூகத்தில் நிலவும்போதெல்லாம் யாரோ ஒரு மகான் வந்து அவதரித்து, மக்களுக்கான மார்க்கத்தை உணர்த்துகிறார். அது ஏற்கனவே இருந்த பாதைதான். பயணத்தின் உண்மை புரியாத யாரோ அதை அடைத்து வைத்திருந்தார்கள்; அதை மக்கள் பயன்படுத்த விடாது செய்திருந்தார்கள். அந்த மகான் வந்து தடைகளைத் தூளாக்கும்போது, பொங்கிப் பிரவாகம் எடுக்கும் நதிவெள்ளம் போல பின்தொடர்கிறார்கள் மக்கள்.
அப்படி ஒரு சூறாவளியாக அவதரித்தவர்தான் வள்ளலார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் புரிந்துகொண்டவர்கள் குறைவு. பள்ளிகள் சென்று பயிலாமலே பாக்கள் இயற்றிய ஞானக் குழந்தை அவர். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனப் பாடிய அவரது மனம் உன்னதமானது. ‘துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கைதூக்கி விடுவதுதான் வழிபாட்டின் பலன்’ என்பதை உணர்ந்திருந்தவர். ‘பசியோடு இருக்கும் ஒருவருக்குக் கல்வி புகட்ட முடியாது’ என்பார்கள் ஆசிரியர்கள். ‘பசியில் தவிப்பவருக்கு கடவுளே எதிரில் வந்து நின்றாலும் கும்பிடத் தோன்றாது’ என்ற உண்மையை உணர்த்திய ஞானாசிரியர் அவர். பசியை ஒரு பிணி என்றார் அவர்; அந்தப் பசிப்பிணி போக்குவதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது... பல வயிறுகளில் எரியும் பசித்தீயை ஆற்றிக்கொண்டிருக்கும் அந்த அணையா நெருப்பின் சுடர் பற்றி, அவர் வாழ்வைப் படிப்போம்... வாருங்கள்!