அரசியல் படுகொலைகள்

அரசியல் படுகொலைகள்
உலகப் புகழ்பெற்ற க்ரைம் த்ரில்லர் நாவல்களைவிடவும் நிஜ வாழ்வில் நடைபெறும் குற்றங்கள் படுபயங்கரமானவை. கற்பனைப் பாத்திரங்களைவிடவும் நிஜக் கொலைகாரர்கள் படு ஆபத்தானவர்கள். கதைகளில் வரும் கொலையாளிகளை ‘அட’ என ரசிக்க முடியும். ஆனால் நிஜ வாழ்வில் ஒரு கொலையாளி நம்மை ரத்தத்தின் வாசத்தை உணரச் செய்துவிடுகிறான். நடுங்க வைக்கும் பயங்கரத்தை நிகழ்த்திவிடுகிறான். அப்படி திடுக்கிட வைக்கும் திருப்பங்களும் சிலிர்க்க வைக்கும் சம்பவங்களுமாக சரித்திரத்தின் பக்கங்களில் ரத்தத்தை அள்ளித் தெளித்த அரசியல் படுகொலைகள் சிலவற்றை இந்த நூலில் சுவாரசியமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் ரா.வேங்கடசாமி.
ரோமப் பேரரசின் வரலாற்றையே மாற்றிய ஜூலியஸ் சீசரின் படுகொலை, ரஷ்யப் பேரரசின் அந்தப்புரத்தில் அதிகாரம் செலுத்தி மறைமுகமாக ஆட்சி நடத்திய போலித் துறவி ரஸ்புடீன் படுகொலை, ரஷ்யப் புரட்சிக்கு பிந்தைய காலகட்டத்தில் நிகழ்ந்த டிராட்ஸ்கி படுகொலை, உலகையே புரட்டிப்போட்ட அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை, இன்றுவரை சஸ்பென்ஸ் விலகாத கென்னடி படுகொலை, அமெரிக்கக் கறுப்பினத்தவரைக் கலங்க வைத்த மார்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை, இந்தியா சுதந்திரம் பெற்றபோது அந்தப் பணிகளை கவனித்த பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு படுகொலை என இந்த நூல் முழுக்க வரலாற்றுக் காட்சிகள் விரிகின்றன.
இன்னொரு பகுதியாக, தோல்வியில் முடிந்த சில கொலை முயற்சிகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஹிட்லர், விக்டோரியா மகாராணி, இரும்புப் பெண்மணி எனப் புகழப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கரெட் தாட்சர், கியூப புரட்சியின் மூலம் அதிபரான பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கைச் சம்பவங்கள் அவை.
சூழ்ச்சிகளாலும் சதிகளாலும் வஞ்சகங்களாலும் வரலாற்றின் நிகழ்வுகளை ஒருசிலரே முடிவு செய்கிறார்கள். ஆனால் அவற்றின் விளைவுகளை கணக்கற்ற மனிதர்கள் சுமக்கிறார்கள். உலக சரித்திரத்தின் போக்கை திசை திருப்பிவிட்ட இப்படிப்பட்ட படுகொலை நிகழ்வுகளைப் படிப்பதே உண்மையான வரலாற்றுத் தேடலாக இருக்கும்..