டாலர் தேசம்
குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.
இது அமெரிக்காவின் அரசியல் வரலாறு.
அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தை அறிந்துகொள்வதென்பது ஒரு வகையில் உலக சரித்திரத்தையே ஓர் அவசரப் பார்வை பார்ப்பதற்கு ஒப்பாகும். நல்ல விதமாகவும் மோசமான விதமாகவும் அமெரிக்கா உறவு கொண்ட தேசங்கள் அனைத்தின் அரசியல் நிலைமையையும் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல் - அமெரிக்கா ஏன் அத்தேசங்களுடன் உறவு அல்லது குறைந்தபட்சம் தொடர்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம்.
தனக்கு லாபமில்லாத எந்த ஒரு தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதில்லை; உள் நாட்டு விவகாரங்களில் பங்கு கொண்டதில்லை; யுத்தங்கள் தொடுத்ததில்லை என்பது அதன் சரித்திரம் முழுவதும் காணக் கிடைக்கும் உண்மை. இது தொடர்பாக, ஏராளமாகக் கிடைத்த ஆதாரங்களே இந்நூலின் மௌன அடித்தளம்.
டாலர் தேசம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளியானது. தமிழில் மிக அதிகம் விற்பனையான, வாசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட அரசியல் பிரதி இதுவே.