அடேங்கப்பா ஐரோப்பா

அடேங்கப்பா ஐரோப்பா
இப்போதெல்லாம் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கமுடிகிறது. அரக்கோணத்துக்கும் அச்சரப்பாக்கத்துக்கும் இணையாக ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும், தனியாகவும் குடும்பத்துடனும் மக்கள் பயணிக்கிறார்கள். மேல் படிப்புக்காகவும், வியாபார நிமித்தமாகவும் விமானம் ஏறுபவர்களைத் தவிர, ஹாலிடேவுக்காக காமிரா சகிதம் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்புபவர்களும் அநேகம் பேர்! இப்படி, மேல் நாட்டுப் பயணம் மேற்கொள்பவர்களெல்லாம், அங்கே தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்துவிடுவதில்லை. அதிகபட்சம் தங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவற்றைப் பகிர்ந்துகொள்வதோடு சரி! அதேசமயம், வெளிநாட்டுப் பயணக்கட்டுரைகளைத் தமிழில் எழுதுபவர்களும் நிறைய பேர் உண்டு. வெறுமனே, தங்கிய ஓட்டல்கள் பற்றியும், சாப்பிடும் உணவு வகைகள் பற்றியும் எழுதுவதோடு, வெளிநாட்டு மக்கள் பற்றியும், பண்பாடு, கலாசாரம் பற்றியும், பார்க்கும் இடங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றியும் எழுதும்போது வாசிக்கும் சுவாரஸ்யம் அதிகமாகிறது. வேங்கடம் எழுதியிருக்கும் இந்த அடேங்கப்பா... ஐரோப்பா நூல் ஐரோப்பா கண்டத்திலுள்ள உலகப்புகழ்மிக்க இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். தனக்கென்று தனி ஸ்டைல் அமைத்துக்கொண்டு சுற்றுலா தலங்களைப் பற்றி அழகாக வர்ணிக்கிறார் நூலாசிரியர். ரோம், பைசா நகரம், லண்டன் தொடங்கி, உலகின் மிகச்சிறிய நாடான வாட்டிகன் வரை அந்த நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களைப் பற்றி வாசிக்கும்போது, அங்கிருக்கும் காட்சிகள் அப்படியே ஒரு திரைப்படம் போல நம் கண்முன்னே விரிகிறது. உலக அதிசயங்களில் ஈஃபிள் டவர், பைசா கோபுரம் இரண்டைப் பற்றியும் பல புதிய தகவல்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. படிக்கப் படிக்க விறுவிறுப்பு குறையாது என்பதே இந்த நூலின் சிறப்பு. வெறும் பயணக் கட்டுரைகளாக இல்லாமல், வரலாற்றுப் பின்னணியோடு புதிய பயண அனுபவத்தைக் கொடுக்கிறது. பலருக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கவேண்டும் என்று ஆவல் இருக்கும். ஆனால், பயணத்தை எப்படித் திட்டமிடுவது என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்நூல் சிறந்த பயணத் துணைவன்! இனி, ஐரோப்பாவைச் சுற்றலாம் வாங்க..