உன்னோடு ஒரு நிமிஷம்

உன்னோடு ஒரு நிமிஷம்
சிறுவர்கள் என்றாலே குறும்பும், துடிப்பும், துடுக்குத்தனமும் இல்லாமல் இருக்காது. இளம் ரத்தம், முறுக்கேறும் தேகம், வேகமான மூளைச் செயல்பாடு என்று அந்த வயதுக்கே உரிய எல்லா வளர்ச்சிகளும் நடந்துகொண்டு இருப்பதால் அவற்றைத் தடுக்கமுடியாது. ஆனால், இந்தத் துடிப்பையும் துடுக்குத் தனத்தையும் திசை திருப்பிச் சரிப்படுத்த முடியும்; சீர்ப்படுத்த முடியும். பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். வளரும் பருவத்தில் நிறைய பிள்ளைகள் பெற்றோரின் சொல்படி நடப்பதில்லை. சிலர் வளர்ச்சியின் வேகத்தில் பாதை மாறிப் போகவும் நேர்கிறது. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. தாய் _ தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடையாளமற்றுப் போக வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட எண்ணற்ற பல தகவல்களை உள்ளடக்கி, வளரும் இளம் தலைமுறை யினருக்காக வெ.இறையன்பு, சுட்டிவிகடனில் எழுதிய ‘உன்னோடு ஒரு நிமிஷம்!’ தொடர் கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இப்போது, அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளி வந்திருக்கிறது. வளரும் இளம் பருவத்தினர் தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள இந்த நூல் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும்.