திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை

திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை
இந்த நூலானது அருணாசல புராணத்திலிருக்கும் ‘பார்வதி தேவி கயிலையிலிருந்து பூமிக்கு வந்து மீண்டும் அருணாசல ஈசனை அடைந்ததன்’ சாரமாகும். தேவியானவள் நம்மில் ஒருத்தியாக அருணாசலத்தின் மகாத்மியத்தை உணர்த்துவதை விரிவாக இந்த நூல் அலசுகிறது. கயிலாயத்தில் ஒருநாள் ஈசன் தனிமையில் இருக்கும்போது, குறும்பு கொப்பளிக்க பார்வதி தேவி அவரை நெருங்கி கண்களைப் பொத்துகிறாள். அந்தக் கணத்தில் இந்தப் பிரபஞ்சம் ஸ்தம்பித்துப்போகிறது. எங்கும் இருள் சூழ்கிறது. பலரும் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். பதறிப்போய் அன்னை மன்னிப்பு கேட்கிறாள். என்றாலும், செய்த பாவத்துக்குத் தண்டனை உண்டு என்பது இறை நியதி.
ஈசனின் மனைவியே ஆனாலும் விதிவிலக்கு இல்லை. தன்னைப் பிரிந்து பூவுலகிற்குச் செல்லுமாறு தேவியைச் சபிக்கிற ஈசன், பூவுலகின் ஏழு மோட்சபுரிகளில் ஒன்றான காஞ்சிநகரில் தவம் இயற்றி தன்னை மீண்டும் சேரும் வழி தேடுமாறு பிராயச்சித்தமும் சொல்கிறார். அப்படி காஞ்சிக்கு வந்து தவமிருந்த பார்வதி தேவி, அங்கிருந்து பல தலங்களின் வழியாக திருவண்ணாமலைக்கு ஞான யாத்திரை மேற்கொண்டு, அருணை மலையின் பெருமைகளை உணர்ந்து, ஈசனோடு சிவசக்திச் சொரூபமாகக் கலந்துறைந்த புராணமே இந்த நூல்.
‘நின்னைச் சரணடைந்தேன்’ என இறைவனைச் சரண் புகுந்து நிம்மதி தேடும் வாழ்க்கைப் பயணத்துக்கான வழிகாட்டியாக இந்த ஞான யாத்திரை இருக்கிறது. அந்த வழியில் உங்களைக் கைபிடித்து நடத்திச் சென்று, மலையே ஈசனாக உறைந்திருக்கும் திருவண்ணாமலை தலத்தை வணங்குவதால் கிடைக்கும் மாற்றங்களை உணர்த்தும் மகத்தான நூல் இது!