திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு

திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அகண்ட காவிரியாக சலசலத்து வந்து, கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையைத் தழுவி, விளைநிலங்களை பசுமையாக்கிப் பாய்ந்தோடும் காவிரி ஆறு கரை பாவி நடக்கும் மாநகர் திருச்சி. துப்பாக்கித் தொழிற்சாலை, பாரத மிகுமின் நிறுவனம் என தொழிற்சாலைகளும் நிரம்பிய மாநகரம் திருச்சி. திருச்சியைச் சுற்றி அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலங்கலான ரங்கமும் சமயபுரமும் புகழும் நெடிய வரலாறும் கொண்ட கோயில்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசியலில் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்திய அரசியல் இயக்கங்களின் செயல்பாட்டுக் களமாகவும் திருச்சி திகழ்ந்தது. தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்தியது மொழிப்போர். அந்த முதல் மொழிப் போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது திருச்சி மண். இப்படிப் பல பெருமைகளை தனக்குள் தாங்கிக் கொண்டிருக்கும் திருச்சியைப் பற்றி வரலாற்றுத் தரவுகளோடு விகடன் இணைய இதழில், ஊறும் வரலாறு எனும் தலைப்பில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல்தான் இது. திருச்சியில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள், கல்லணையின் வரலாற்றுப் பெருமை, அந்த மாவட்டத்தை பூர்விகமாகக்கொண்ட பிரபல எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், திருச்சியின் கல்விக் கூடங்கள்.. என திருச்சி பற்றிய அனைத்துத் தகவல்களையும் சுவைபடத் தருகிறது இந்த நூல். இந்த நகருக்கு இத்தனை பெருமைகளா என வியக்க வைக்கப்போகும் திருச்சியின் வரலாறை அறியச் செல்லுங்கள்.