சிவப்புநிற மழைக் கோட்டில் ஒரு பெண்
சிவப்புநிற மழைக் கோட்டில் ஒரு பெண்
மிகச்சுத்தமான வெள்ளை பருத்திப் பைஜாமாவும், குர்தாவும் அணிந்து அவருடைய வீட்டில் புத்தகங்கள் குவிந்திருக்கும் மேஜையின் அருகிலுள்ள பெரிய நூற்காலியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார், கையில் எழுதும் அட்டையுடனும் பேளாவுடனும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயந்தவரல்ல, அவருடைய சுதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். 'காலித்'தின் மும்தாஜ், 'அவமானத்தில்' வரும் பாலியல்தொழிலாளி ஜமுனா, தன் மகளைத் தேடிக் கண்டடையும் 'திஹூ'வில் வரும் சிராஜூதின், *சிவப்பு நிற மழைக்கோட்டணிந்த பெண்'ணில் வரும் ஓவியக்கலைஞர் மிஸ், எஸ், 'மோஸலில்' வரும் மோஸல், குருமூக்சிங்கின் கடைசி விருப்பத்தில் வரும் குருமூக்சிங், மத்தனையெத்தனை கதாபாத்திரங்கள் மண்ட்டோவின் ரத்தத்திலிருந்து உருவானவை. சமூக அவலங்களைக் கண்டு அவருடைய துயரப்பெருமூச்சாய் வெளிவந்தவை. நம் மனசாட்சியை உலுக்கி நம் உறக்கம் கெடுப்பவை. எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற மொண்ணைத் தனத்தின் மீது சவுக்கடி கொடுப்பவை. மண்ட்டோ கலைந்த தன் தலைமுடியைக் கோதி விடுகிறார். அருகில் உள்ள பீரோவிலிருந்து விஸ்கியை எடுத்து ஒரு மிடறு விழுங்குகிறார். மறுபடியும் யோசித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கல்லறைக்குறிப்பை எழுதவே அவர் உட்கார்ந்திருக்கிறார். எத்தனையோ முறை மருத்துவர்கள் அவருக்குத் தேதி குறித்தார்கள். ஆனால் எப்போதும் கலகம் செய்வதைப் போல மரணத்திடமும் கலகம் செய்து தப்பித்துக் கொண்டேயிருந்தார். அவருக்குத் தெரியும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ரெம்ப நாளைக்கு நீடிக்காது என்று. எவ்வளவு நாளைக்கு நீடிக்கமுடியுமோ அவ்வளவு நாளைக்குத் தள்ளிப்போடலாமே என்று முடிவு செய்திருந்தார். அவ்வப்போது அவர் இருமும்போது ரத்தமும் சேர்ந்து வருகிறது.. சாதத் ஹசன் என்ற மனிதனை, அவனுடைய சிந்தனைகளை, செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள், யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை, தன் ஊனை உருக்கி, உயிரைச் செலுத்தி, அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது.
சிவப்புநிற மழைக் கோட்டில் ஒரு பெண் - Product Reviews
No reviews available