ரத்த மகுடம்

ரத்த மகுடம்
159 அத்தியாயங்கள் (வாரங்கள்) மூன்றே கால் வருடங்க... ஒரு நாவல்... கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் 'ரத்த மகுடம்” நாவல் வழியே 'குங்குமம்' வார இதழ் நிகழ்த்தியிருக்கிறது. நரசிம்மவர்ம பல்லவரின் பேரனான பரமேஸ்வரவர்மரின் ஆட்சிக் காலத்தில் சில ஆண்டுகள் பல்லவ அரசு சாளுக்கியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. பின்னர் சாளுக்கியப் படையை முறியடித்து இழந்த அரசைத் திரும்பப் பெற்றது. இது வரலாறு. போலவே, நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் சாளுக்கியரின் தலைநகரான வாதாபி, பல்லவப் படையால் தீக்கரையானது. இதற்குப் பழிவாங்கத்தான் இரண்டாம் புலிகேசியின் மகனான விக்கிரமாதித்தர், தொண்டைமண்டலம் வந்தார். அப்படி வந்த சாளுக்கியப் படையுடன் பல்லவ மன்னர் போரிடவில்லை. காஞ்சியை அப்படியே சாளுக்கியர்களிடம் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். யுத்தமின்றி காஞ்சியைக் கைப்பற்றிய விக்கிரமாதித்தர். வாதாபியைப் பல்ல வர்கள் தீயிட்டுக் கொளுத்தியது போல் எரிக்கவில்லை. இதுவும் சரித்திரம், தன் தலைநகரை ஏன் பரமேசுவரவர்மர் எதிரிக்குத் தாரைவார்த்தார்... பிறகு ஏன் படைதிரட்டி மீண்டும் கைப்பற்றினார்; பழம் நழுவி பாலில் விழுவதுபோல் தன் மடியில் விழுந்த பகைவனின் தலைநகரை ஏன் விக்கிரமாதித்தர் சேதப்படுத்த வில்லை..? கிளைபரப்பும் வினாக்களுக்கு விடை காண ரத்த மகுடம் முயல்கிறது...