ராமாநுஜர்

ராமாநுஜர்
மக்களிடம் மிகுந்த மதிப்புப் பெற்றிருக்கும் துறவியான ராமாநுஜர், மாபெரும் சீர்திருத்தவாதியாகவும் புரட்சியாளராகவும் அறியப்படுகிறார். பிராமணர் அல்லாதவர்களையும் தன் குருவாகவும் சீடர்களாகவும் ஏற்றுக்கொண்டவர். திருவரங்கம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் மாற்றங்களைச் செய்து ஒழுங்குபடுத்தியவர். தாழ்த்தப்பட்டவர்களைத் திருக்குலத்தார் என்று குறிப்பிட்டு அவர்களுக்குப் பிறரைப் போலவே சம இடத்தை அளித்தவர். மேல்கோட்டை கோவிலுக்குள் அவர்கள் செல்ல அனுமதி பெற்றுத் தந்தவர்.
“ராமாநுஜர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர் என்பதே எனக்கு அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமென்ற உந்துதல்” என்று கூறும் இ.பா., “இதைப் படிக்கிறவர்களும் மேடை ஏறும்போது பார்ப்பவர்களும் ராமாநுஜரை நமக்குச் சம காலத்தவராக உணர வேண்டுமென்பதுதான் இந்நாடகத்தின் நோக்கம்” என்கிறார். அக்காலத்தியப் புரட்சியாளராக இருந்த ராமாநுஜரை ஸ்தாபனச் சிறையினின்றும் மீட்டுப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இ.பா. சொல்கிறார்.
வரலாற்று நாயகர்களில் ஒருவரான ராமாநுஜரைப் புரிந்துகொள்ளத் துணைபுரிவதுடன், ராமாநுஜரைப் பற்றி ஆழமாக அறிவதற்கான தூண்டுதலையும் இந்த நாடகம் ஏற்படுத்தும்.