புரட்சி விதை
அமைதியான அந்த இரவு நேரத்தில் யாரோ புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.நிலவொளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.ஏகாந்தமிக்க குளிர் நிறைந்த இரவு , எங்கிருந்தோ காற்றிலே மிதந்து வரும் புல்லாங்குழலின் ஓசை இனிமையான சொப்பனமாகத் தோன்றியது.நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அது மிகவும் அழகாக இருந்தது.ஒரு மூங்கிலின் வெற்றுக் குழலில்் எத்தகையதோர் அமிர்தமான இசை!வாழ்க்கையும் ஒரு புல்லாங்குழலைப் போலத்தான்.தன்னிலே ஒரு வெறுமையாக சூன்யமாக உள்ளது.அதனால் கூடவே ஒரு மாபெரும் சங்கீதத்தை பிரதிபலிக்கும் தகுதியையும் பெற்றுள்ளது.எல்லாம் அதை மீட்டுபவர்களைப் பொறுத்து உள்ளது.எவ்வாறு ஒருவன் அதனை மீட்டுகிறனோ வாழ்க்கை அவ்வாறே மாற்றிவிடுகிறது.அதனை நிர்மாணிப்பது அவனே!... நரகத்தையோ சொர்க்கத்தையோ அமைத்தக் கொள்ள அவன் முழு சுதந்திரம் பெற்றிருக்கிறான்.