புனைவும் நினைவும்

புனைவும் நினைவும்
ஊரின் கண்மாய், புறப்படத் தயாராக நிற்கும் புளியன ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, ஊருணிகள், கிணறுகள், ஆலமரங்கள், பழந்தின்னி வௌவால்கள் நிரம்பிய அத்தி அரசமரங்கள். பால் வடியும் முதிர் வேப்பங் கன்னிகள் பாம்புகள் நெளியும் கோவில்கள், பேய்கள் தெரைப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள். மூக்கையாரெட்டியார் போன்ற நூறு வயதை எட்டிய எனது மூத்த நண்பர்கள் நெஞ்சுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரிய கார்த்திகை, ஊர் முழுதும் கூடி ஆலமரங்களின் அடியில் அமர்ந்து பலவகைக் கஞ்சிகளைக் குடிக்கும் வடக்கத்தியம்மன் கஞ்சி, சேத்தாண்டி வேஷம் போட்டு ஆரேஹா அய்யாஹோ போகும் உத்தண்டசாமி கோவில் பங்குனிப் பொங்கல் போன்ற எங்கள் எளிய திருவிழாக்கள் என்று எவ்வளவு ஞாபகங்கள்? இருபது வயது வரையிலான எனது பால்யத்தையும் இளம்பருவத்தையும் கட்டமைப்பதில், ஒரு சமூக நானை எனக்குள் வளர்த்தெடுப்பதில் எனது வாருக்குப் பெரும்பங்கு இருந்திருக்கிறது. வாழ்வு மீதான பெருவிருப்பம், பொருளாதாரம் மற்றும் சாதியம் முதலான எல்லாவகையான ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்ற பெரும் லட்சியம், புத்தகங்களைத் தேடித் தேடி வெறி பிடித்து அலைந்த இனம் புரியாத அகத்தாகம், சொந்தக் குடும்பத்தின் கடைசி உத்திரங்களும் கரையான் அரித்துக்கொண்டிருந்த சோகம் என பெரும் கொந்தளிப்பு மிக்க எனது இளமையை ஊர்தான் தாங்கிக்கொண்டது. எனவேதான் ஊரின் மீதான மாயக்காதல் இன்றும் முடிந்தபாடில்லை.