போஜராஜன்

போஜராஜன்
வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட போஜராஜன், கவி இயற்றுவதிலும் பாடல் புனைவதிலும் திறன் படைத்தவன் என்பது, ஏடுகள் எடுத்துரைக்கும் தகவல்களில் ஒன்று. இவனுடைய பிறப்பு தொடங்கி, இளமைக் காலம், நாடு, சமகாலத்து மன்னர்களுடனான உறவு, மேற்கொண்ட போர்கள், தலைநகர் தாரா நகரத்தின் தனிச்சிறப்பு, பின்பற்றிய சமயம், கட்டிய ஏரியின் பின்னணி, எழுதிய நூல்கள் என போஜராஜனின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படி எழுதியுள்ளார் நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாஸன். மேலும், கலைவாணியான சரஸ்வதி தேவிக்கு இவன் எழுப்பிய கோயில், சம்பூராமாயணத்தின் சாரம், சாலி ஹோத்ரா என்பதற்கான விளக்கம், ஆட்சிச் சிறப்பை விளக்கும் செப்பேடுகள், காலத்தை கடந்த நிகழ்வுகளை இன்றும் விளக்கிச் சொல்லும் கல்வெட்டுகள் என போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்துள்ளது இந்த நூல். போஜனின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொள்ள பிரியப்படும் வாசகர்களுக்கான வரப்பிரசாதம், இது. போஜராஜன் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாத குறையைத் தீர்க்க வந்துள்ளது இந்த நூல்.