ஒற்றைப் பல்

ஒற்றைப் பல்
வாழ்வின் அர்த்தங்களை, அன்பின் புரிதலை, மானுட நேயத்தை, எனக்கு கற்பித்த அன்பினாலான தேவதைகள். சாந்தி, மோலி, எலிசபெத் டோரா, வேதவள்ளி, நிம்மி, ரோசி இன்னும்கூட. மனிதர்களே இல்லாத உலகத்திலிருந்தவன் போல தீவிரமான உரையாடல், உறவாடலென அந்த யூனிட்டில் எனக்கு எல்லாருமே உறவுக்காரர்கள் தான். அவர்கள் தான் என்னை அன்பின் காய்ச்சலில் வீழ்த்தி, புரிதல் தீயில் புடம் போட்டவர்கள். கதைகள் கேட்பதில் ஆர்வமுள்ள எனக்கு அவர்களின் சொந்தக் கதைகள் மிக ஆர்வமூட்டக்கூடியதாய் இருந்தன. வாழ்வை, அதன் துயரை, கனவை, பேரவாவை, அன்பின் மாய வித்தையை, அர்ப்பணிப்பை, துயர் மறைத்த புன்னகையை, உழைப்பை, உடலை, சுரண்டும் வஞ்சகத்தையென அவர்கள் மூலம்தான் அதிகமாக உணர்ந்தேன், என்றாலும் இன்னும் கூர்மையடையாத பொழுதொன்றில் "தங்கம்போல இருந்தியடா ஏன்டா இப்படி தகரமாயிட்ட"ன்னு என்னை கருணையுள்ளத்தோடு குத்திக் கிழித்து என்னை உசுப்பி அவர்கள் உலகத்திலிருந்து என்னை தூக்கியெறிந்த தேவதையின் குரலை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நான் தங்கமுமில்லை; தகரமுமில்லை. வேறெதுவுமேயில்லையென்று அவளுக்கு சொல்ல எனக்குத் தெரியவில்லை. அவர்கள்தான், கோயில்தாஸ் என்கிற கிழவனாக, சாரதா லீனா மேரியாக, இந்த நாவலில் உலாவுகிறார்கள். இருபது ஆண்டுகள் கடந்து அந்த தேவதைகளுக்கு கை கூப்பி நன்றி சொல்ல விரும்புகிறேன்