ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம்

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம்
மணல் என்னும் மேலாடை வலுக்கட்டமாயமாக இழந்து நிற்பது தான் நதி அடைந்த கொடுமைகளிலேயே சகித்துக் கொள்ள முடியாதது.மேலாடையை இழந்த நதி இன்று கூனிக்குறுகிப்போய் நிற்கிறது. அவமானமற்று தற்கொலைக்குத் தயாரான நதியையும் மனிதன் விட்டு வைக்கவில்லை. பாதாளம் வரை தோண்டி நதியை எதற்கும் பயன்படாத பள்ளமாக்கி விட்டான். சிதைக்கப்பட்ட ஆறுகள் கசாப்புக்கடையை நினைவு படுத்துகின்றன. தாய்ப்பாலை போல ஆற்றுநீரைப் பருகி வளர்ந்தவர்களால் இதனைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஒரே சீரான பாதை அமைத்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்த நதிக்கு இன்று தன்பாதை எதுவென்று தெரியவில்லை. பொஞ்சம் மழை பெய்தாலும் ஒழுங்கற்று ஓடத் தொடங்கிவிடுகிறத. எங்கும நீர்ப்பெருக்கு. வெள்ளப்பெருக்கால் நதிக்குச் செய்த துரோகத்தின் பயனை மனிதன் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். ஒருபுறம் மணல் இழந்த ஆறுகளில் ஊற்றுநீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. மறுபுறம் முற்றாக மணல் அகற்றப்பட்டதில் ஆற்றுப் பாலங்களில் பல இடிந்து பெரும் அழிவைத் தருகின்றன. ஆற்றுமணல் அழிவால் மானுடம் எத்தகைய பேரிழப்பை சந்திக்கிறது.மணல் கொள்ளையை கொலைக் குற்றமாக நம் சமூகம் கருதவேண்டும். பூமியில் எது நாளடைவில் குறைந்து வருகிறதோ அதில் உலக முதலாளிகளின் கழுகு கண்கள் வட்டமிடத் தொடங்கிவிட்டன. 20ஆம் நூற்றாண்டில் பெட்ரோல் பற்றாக்குறையாகி அது உலகில் போர் நிகழ காரணமாக அமைந்துவிட்டது. 21ஆம் நூற்றாண்டில் உலகில் நீருக்கான யுத்தங்கள்தான் நடைபெறப்போகின்றன.உலக குளிர்பான கம்பெனிகள் நம் நாட்டு ஆறுகளையும் ஏரிகளையும் விலை பேசிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தையும் இந்த அபாயம் சூழ்ந்து நிற்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் காலடி எடுத்து வைக்கும் வேகத்தைப் பார்த்தால் நீரை ஆதிக்கப்படுத்திக்கொள்ளும் உலகப் போர்கள் மிக அருகில் வந்துவிட்டதோ என்ற அச்சம் இப்பொழுது எழுந்துள்ளது.