நினைவலைகளில் பாவேந்தர்

நினைவலைகளில் பாவேந்தர்
கவிஞர் பொன்னடியான் அவர்கள் எழுதியது. மருத்துவமனைக்கு உள்ளே நுழைந்து பாவேந்தர் அவர்களைத் தங்க வைத்துள்ள ஐந்தாம் எண் வார்டுக்கு வருகிறேன். அப்பொழுது நேரம் காலை எட்டு மணி அல்லது எட்டேகால் மணி இருக்கலாம்.. அந்த வார்டின் முன் பகுதியில் ஒரே கூட்டமாக இருக்கிறது. என் கால்கள் என்னையுமறியாமல் அந்த வார்டை நோக்கிப் பரக்கப் பரக்க வேகநடை போடுகின்றன.அப்போது ஏதோ பதட்டம் நிலவுவதாக எனக்குப் படுகிறது. அறையின் உட்பகுதியிலிருந்து தலை கலைந்த கோலமாக ஓடிவந்த பாவேந்தரின் திருமகன் மன்னர்மன்னன் "பொன்னடி!நம்ம கவிஞர் போயிட்டாரு!"என்று கதறித் துடிக்கிறார்.அந்தநொடியில் என் நிலையை நான் இழந்துவிட்டேன் . என் கையிலிருந்த அம்மாவுக்காக வாங்கி வந்திருந்த சிற்றுண்டிப் பொட்டலம் ,துணிமணிகள் ,நாட்குறிப்பேடு எல்லாம் என்னிடமிருந்து நழுவிச் சிதறிவிடுவதும் எனக்குத் தெரியாமல் டிடிபாய்விடுகிறது.உலகமே இருண்டு விட்டதாகவும் எனக்கிருந்த ஆதரவு அனைத்தும் விடைபெற்றுக் கொண்டதாகவும் எழும் எண்ண அலைகள் என் கண்ணீரோடும் கதறலோடும் கைகோர்த்துக் கொள்கின்றன.பாவேந்தரின் உயிரற்ற உடலின் முன் நின்று"அய்யா இனி உங்களுக்கு யார் துணை?"உச்சியில் பதித்துக் கதறுகிறேன்-ஆதரிப்பார் யாருமில்லா அநாதையாக!