நாட்டுக்குறள்
நாட்டுக்குறள்
திருக்குறள் இன்பத்துப்பால் ஊட்டும் உணர்வுகளை, தற்காலப் பின்னணியில் புதுக்கவிதைகளாகவும், நாட்டுப்புறப்பாடல் வடிவிலும் அவ்வப்போது எழுதிப் பதிவிட வள்ளுவர் குடும்பத்தின், ‘வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்’ என்ற சமூக ஊடகக் குழு (முதலில் ‘வாட்ஸ் அப்’, இப்போது ‘டெலிகிராம்’) எனக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. இல்லையென்றால் என்மட்டில், இது சாத்தியமாகி இருக்காது. அவ்வாறு பகிர்வு செய்த பதிவுகளில், ஏழு நாட்டுப்புறப் பாடல்களுக்கு இசையமைப்பாளர் தாஜ் நூர் அருமையாக இசை அமைத்துள்ளார். மிகத்தேர்ந்த பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் இந்தப்பாடல்களைப் பாடியுள்ளனர். இந்த ஏழு குறட்பாக்களுக்கு பரிமேலழகர் முதல் நாமக்கல் கவிஞர், மு. வ., கலைஞர் மற்றும் வள்ளுவர் குடும்பத்தைச் சேர்ந்த சிற்பி, ஹெலினா கிறிஸ்டோபர், அன்வர் பாட்சா வரை ஏழு உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைகளைப் பயன்படுத்தியுள்ளோம். குறட்பாக்களுக்கும் அவற்றின் உரைகளுக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பாகக் குரல் கொடுத்துள்ளார். அப்பாடல்களே ‘நாட்டுக்குறள்’ ஒலிப்பேழையாகவும் இனிய நண்பர் டிராட்ஸ்கி மருதுவின் தூரிகையில் நாட்டுக்குறள் ஓவியமாகவும் உருப்பெற்றுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் ஏட்டுச் சுவடியில் எழுதிய குறள், பல்வேறு காலகட்டங்களில் உரையாசிரியர்களின் சிந்தனையில் பல்வேறு நடைகளில் உரைவடிவம் பெற்று தற்போது கைப்பேசி விசைப்பலகையில் நாட்டுப்பாடலாகி, இசை வடிவம் பெற்று, நாட்டுக்குறளாய் ஒலித்து, நவீன ஓவியமாகி உங்கள் கரங்களில் தவழ்கிறது. இது ஏழே பாடல்களைக் கொண்ட குறும்படைப்பு. ஆனால், இதன் ஊடாக இருப்பதோ ஈரடிக்குறள் பற்றிய இரண்டாயிரம் ஆண்டுகாலப் புரிதல்கள். திருவள்ளுவரை மனிதம் பாடிய மாமனிதராய், ஒளிவு மறைவற்ற உயர்தனிக்கவிஞராய்க் கொண்டாடுவதே நாட்டுக்குறளின் நோக்கம். அதுவே அதன் உந்துவிசை. இது ஊர் கூடி இழுக்கும் தேர். இப்போது இதன் வடம் உங்களிடம். ஆர். பாலகிருஷ்ணன்
நாட்டுக்குறள் - Product Reviews
No reviews available