நாயகன் சார்லி சாப்ளின்

நாயகன் சார்லி சாப்ளின்
ஆயிரக்கணக்கான கடிதங்கள் சாப்ளினுக்கு வந்து குவிந்தன. அதில் ஒன்று உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதியது. அந்த அன்பின் நெகிழ்ச்சியில் சாப்ளினுக்கு கண்ணீர் கட்டியது. உடனடியாக அவருக்குப் பதில் எழுத வேண்டும் என நினைத்தபடி அடுத்த கடிதத்தைப் பிரித்த சாப்ளினுக்கு இடி இறங்கியது. என்னை நினைவிருக்கிறதா? இந்த சிறுபெண்ணை நீங்கள் மறந்திருக்கவும்கூடும். நான்தான் ஹெட்டி.. - விழிகள் கசிய , விரல்கள் நடுங்கக் கடிதத்தைப் படிக்கலானார் சாப்ளின். நான் ஒரு முட்டாள், அபாக்கியசாலி. நீங்கள் எவ்வளவு உயரமானவர் என்பதை உங்கள் படத்தைப் பார்த்தபோதுதான் தெரிந்துகொண்டேன். நான் இப்போது லண்டனில் இருக்கிறேன். லண்டன் வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைபிடித்த ஒரு முறை என் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் !" கடிதத்தைப் படித்ததும் சாப்ளினுக்கு இருப்புக்கொள்ளவில்லை. நிலைகொள்ளாத உணர்ச்சி அலைகளால் மனம் தடுமாறியது. அடுத்த பத்து நாட்களுக்கு எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். உடனடியாக லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். நடந்தேறின. காதலால் ஏங்கித் தவித்த இதயமொன்று அட்லாண்டிக் கடலலைகளின் மேல் தத்தளிப்பதை அறியாமல், அக்கப்பல் பெரும் சத்தமெழுப்பியபடி நிதானமாக லண்டன் நகரத்தை நோக்கிப் பயணித்தது. பயணம் முழுக்க, ஹெட்டியைப் பார்க்கப்போகும் நிமிடங்களை எண்ணி சந்தோஷித்தபடியே , கொந்தளிக்கும் கடலலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார் சாப்ளின்.