மௌனத்தின் அலறல்

மௌனத்தின் அலறல்
தமிழில்: கே.ஜி.ஜவர்லால்
சாலையில் ஒரு பெண் விழுந்து கிடந்தாள். அருகில் அவளுடைய குழந்தை பால் குடிப்பதற்காக
அவளது மார்பைத் தேடிக் கொண்டிருந்தது. அவள் இறந்து போயிருந்தாள்.
பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களைத்
துறந்து இடம்பெயர்ந்தனர். எழுபத்தைந்தாயிரம் பெண்கள் கடத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப்
பலியாக்கப்பட்டனர். இருந்தும், இந்தியப் பிரிவினை குறித்து அரசியல், வரலாற்றுப் பதிவுகள்
இருக்கும் அளவுக்கு தனிப்பட்ட மக்களின் கதைகள், குறிப்பாக பெண்களின் கதைகள் பதிவு
செய்யப்படவில்லை.
அப்பாவுக்கு அருகில் நான் நின்றுகொண்டிருந்தேன். எனக்கு அருகில் என் சகோதரி. அப்பா
வீச்சரிவாளை வெளியில் எடுத்து வைத்துக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்தார். அரிவாளை
வீச முற்படும்போது ஏதோ தடுத்தது. மகள் மீது இருந்த பாசமாக இருக்கலாம். முதல் வீச்சு
பயனில்லாமல் போனதில் அவர்கள் இருவருக்குமே வருத்தம். சகோதரி கத்தியைத் தானே பிடித்து
கழுத்துக்கு எதிரே வைத்துக்கொள்ள அப்பா பலமாக வீசினார். சகோதரியின் தலை உருண்டது.
முகம், பெயர், மதம், தன்மானம், அடையாளம், வாழ்க்கை அனைத்தையும் தொலைத்து நிற்கும்
பெண்கள் ரத்தமும் சதையுமாக நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்கள்.
‘ஒரு முகமதியரைச் சந்தித்துக் கைகுலுக்கும்போது கையில் சாப்பாட்டுக் கேரியரோ, வேறு
சாப்பிடுகிற பண்டங்களோ இருந்தால் அதில் மாசு படிந்துவிடும். அதை நாங்கள் சாப்பிட மாட்டோம்.
இதுவே ஒரு கையில் நாயும் இன்னொரு கையில் சாப்பாடும் இருந்தால் அப்படி ஆகாது. இது எந்த
வகையில் நியாயம்? இதனால்தான் பாகிஸ்தான் உருவாயிற்று.’
நேரடிக் களஆய்வின் மூலம் திரட்டப்பட்ட அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள். ஒவ்வொரு இந்தியரும்
அவசியம் வாசிக்கவேண்டிய வரலாற்று ஆவணம்.