மழைக்கண்

மழைக்கண்
செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகள் இரண்டு களங்களின் அன்றாடத் தருணங்களால் ஆனவை. கீழத்தஞ்சையின் வேளாண் குடும்பமும் அதன் பின்னணியாகிய சிற்றூரும். இன்னொரு பக்கம் திரையுலகம் இந்த இரண்டு உலகங்களிலும் மாறிமாறி அலையும் செந்தில் ஜெகன்நாதனின் கலை வெறுமே வாழ்க்கைச் சித்திரம் என்பதிலிருந்து அரிய கவித்துவம் வழியாக மேலெழும் தருணங்களே அவரை கலைஞராக்குகின்றன.
அன்றாடத்தருணங்களைச் சொல்ல சிடுக்கற்ற ஒழுக்குகொண்ட மொழி தேவை. தன்னிச்சையான சொற்றொடர் இணைப்புகள் வழியாக அந்த மொழி நிகழவேண்டும் என்றால் இயல்பான மனநிலையும் அதை வெளிப்படுத்தும் மொழிப்பயிற்சியும் இன்றியமையாதவை. அவை செந்தில் ஜெகன்நாதனின் கதைகளில் எப்போதுமுள்ளன. சொற்சுழற்சிகளோ செயற்கையான யத்தனங்களோ இல்லாமல் 'கிளாரினெட்டின்' துளைகள் மீது தானியம் கொத்தும் சிட்டுக்குருவிகள் போல அசைந்த விரல்கள்' என்று சொல்லிச் செல்லும் நடை அவருக்கு எப்போதும் கைகொடுக்கிறது. சிறுகதையின் கலை அவர் கதைகளில் துலங்க இந்த மொழி எப்போதும் உதவுகிறது.