மணிரத்னம் படைப்புகள்; ஓர் உரையாடல்

மணிரத்னம் படைப்புகள்; ஓர் உரையாடல்
டைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப் படங்கள் பட்டியலில் நாயகன் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கிய 19 பிற படங்களும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனித் தன்மையுடன் திகழ்கின்றன.
இருந்தும் மணி ரத்னம் குறித்து நமக்கு அதிகம் தெரியாது என்பதே ஆச்சரியமளிக்கும் உண்மை. இந்தப் படங்களை அவர் எப்படிக் கற்பனை செய்தார்? காட்சியமைப்புகள் குறித்து எப்படிச் சிந்தித்தார்? சினிமாவுக்குமுன் அவர் வாழ்க்கை எப்படி இருந்தது என முதல் முறையாக மணி ரத்னம் தன்னைப் பற்றியும் தன் படங்கள் பற்றியும் மனம் திறந்து விரிவாக இந்தப் புத்தகத்தில் உரையாடியிருக்கிறார். பரத்வாஜ் ரங்கனின் அற்புதமான முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. அதிகம் பேசாத மணி ரத்னத்திடம் ஆழமாக, வெளிப்படையாக, காரசாரமாகக் கேள்விகள் கேட்டு சரளமாக உரையாட வைத்திருக்கிறார் பரத்வாஜ் ரங்கன்.
நகர்ப்புற உறவுச்சிக்கல்களில் ஆரம்பித்து (அக்னி நட்சத்திரம்) தேசிய உணர்வில் ஏற்பட்ட விரிசல்கள் வரையிலான (பம்பாய்) தன் படங்களின் கதைக் கருக்கள்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ஒளியமைப்பில் செய்த புதுமைகள், இளையராஜா, ரஹ்மான் இருவருடைய மாறுபட்ட பாணிகள், நாயகன் படத்துக்கு கமல் கொடுத்த புதிய பரிமாணங்கள், ராவணன் படத்தின் பின்னணி என்று
சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்லி யிருக்கிறார். பாலு மகேந்திரா, பி.சி. ஸ்ரீராம், தோட்டா தரணி, வைரமுத்து, குல்சார் போன்ற திறமைசாலிகளுடனான இனிய நினைவு களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இந்தப் புத்தகம் தீவிர திரைப்பட ரசிகர்களுக்கும் சாமானிய வாசகர்களுக்கும் நல்லதொரு விருந்து.