மகாகவி பாரதியார்(கிழக்கு)

மகாகவி பாரதியார்(கிழக்கு)
பாரதியார் என்னும் ஆளுமையை ஒரு புத்தகத்தில் அல்ல, ஒரு நூலகத்துக்குள்ளும் அடக்கிவிடமுடியாது. கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளில் முன்னோடி அவர்.
யதார்த்தத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இலக்கியம் படைத்துக் குவித்துக்கொண்டிருந்த கற்பனாவாதிகள் மத்தியில் பாரதியார் அபூர்வமானவர். தான் வாழ்ந்த சமூகத்தின் மனசாட்சியாக, தான் நேசித்த மக்களின் ஆன்மாவாக அவர் திகழ்ந்தார். அவர் படைத்த இலக்கியங்கள் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அமைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
பாரதியாரின் வாழ்க்கையை அவர் வாழ்ந்த காலகட்டம், அப்போதைய அரசியல், சமூக, கலாசாரச் சூழல் ஆகியவற்றோடு பிணைத்துப் பார்க்கும்போது அவர் மீதான நம் மதிப்பு மேலும் உயர்கிறது. தேசத்தையும் மொழியையும் அவர் அளவுக்கு வேறு யாரும் நேசித்திருக்கமுடியாது.
எவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டார் என்பதில் மட்டுமல்ல, எவற்றையெல்லாம் நிராகரித்தார் என்பதிலும் பாரதியின் பலம் அடங்கியிருக்கிறது. காலனியாதிக்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை அவர்.
பிற்போக்குத்தனத்தையும், மத ஆதிக்கத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும், மூடப்பழக்க வழக்கங்களையும், தீண்டாமையையும், சாதிப் பிரிவினையையும் சேர்த்தே எதிர்த்தார். எனவே தான் வாழ்ந்த காலத்தோடு ஒட்டாமல் தனித்து ஒலித்தது அவரது குரல்.
கவிதையே வாழ்க்கையாக, வாழ்க்கையே கவிதையாக வாழ்ந்த ஒரு புரட்சியாளரின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கை