மாஃபியா ராணிகள்

மாஃபியா ராணிகள்
தாதாக்கள், மாஃபியாக்களைக் குறிப்பிடும்போது ‘நிழல் உலக தாதாக்கள்’, ‘நிழல் உலக மாஃபியாக்கள்’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அது என்ன நிழல் உலகம்?
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எப்போதும் இரட்டை முகங்கள் இருக்கும். பொதுவெளியில் அவர்கள் காட்டுவது ஒரு முகம்; அதைத் தாண்டிய இன்னொரு முகம்தான், அவர்களின் அதிகாரம் இறுக்கமாகக் கைப்பிடியில் இருக்க உதவி செய்கிறது. அந்த இன்னொரு முகம், நிழல் உலகத்தில் இருக்கிறது. பணத்தில் புரளும் தொழிலதிபர்கள், ஆட்சி நிர்வாகத்தை செய்யும் அரசியல்வாதிகள், எப்போதும் செல்வாக்கு குறையாத போலீஸார் உள்ளிட்ட அதிகாரவர்க்கம்... என இவர்கள் எல்லோருக்குமே தங்கள் அதிகாரம் கைநழுவிப் போய்விடக் கூடாது என்கிற அச்சம் இருக்கிறது. அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள அவர்கள் சில ஏவலாளிகளை வைத்துக்கொள்கிறார்கள்.
அந்த ஏவலாளிகளின் விசுவாசம் அடிக்கடி உரசிப் பார்க்கப்படும். விசுவாசத்தின் அளவு குறையும்போது - அல்லது அவர்களின் பலம் குறையும்போது - அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடும். இப்படித்தான் நிழல் உலகில் அடிக்கடி மாஃபியாக்கள் மாறுகிறார்கள். ஒரே எஜமானருக்கு வேறு வேறு அடிவருடி தாதாக்கள் மாறுவதும் இதனால்தான் சாத்தியமானது.
ஆனால், மும்பையின் நிழல் உலகம் வேறு மாதிரியானது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான அங்கு, பணம் படைத்தவர்களைத் தாண்டி, போலீஸைத் தாண்டி, அரசியல்வாதிகளைத் தாண்டி, அதிகாரம் மாஃபியாக்களின் கைக்குப் போனது. இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்திராத விசித்திரம் இது! அந்த மாஃபியாக்களின் நிழல் உலகில் நுழைந்து, உண்மைகளை ஒரு மர்ம நாவலுக்குரிய விறுவிறுப்புடன் விவரிக்கும் அற்புத நூல் இது. கையில் எடுத்தால், ஒரே மூச்சில் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டீர்கள்!.