நான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் படத்துடன் நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக் கூடியது கார்ட்டூன். அதுமட்டுமல்ல... நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் அரசியல் மற்றும் சமூக கார்ட்டூன்கள், சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்! சில சமயங்களில், சம்பந்தப்பட்டவர்களை முகம் சிவக்கவும் செய்துவிடும். ஆரம்பக் காலத்திலிருந்தே கார்ட்டூன்களில் தனி முத்திரை பதித்து வந்திருக்கிறது ஆனந்த விகடன். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆரம்பித்து இன்று வரையில் விகடன் கார்ட்டூன்களுக்கு தனி மவுசு உண்டு. முக்கியமாக, தேர்தல் காலங்களில் விகடனில் வெளியாகும் கார்ட்டூன்கள், வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்திக்க வைத்ததும் உண்டு! 1969_ல் விகடனுடன் இணைந்தவர் மதன். தொடக்கத்தில் கேரிகேச்சர்கள் வரைந்து, படிப்படியாக முன்னேறி, கார்ட்டூன்கள் வரைவதில் தனக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக் கொண்டவர். கார்ட்டூன்களில் மெலிதாக, சிக்கனமாக கோடுகளைப் (Strokes) பயன்படுத்துவது அவருடைய ஸ்டைல். பின்னாட்களில் ஓர் எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இன்றுவரையில் ‘கார்ட்டூனிஸ்ட் மதன்’ என்றே பிரதானமாக அவர் அறியப்படுகிறார். 1969_ல் ஆரம்பித்து 1989 வரையில் விகடனில் வெளியான மதன் கார்ட்டூன்களின் தொகுப்பு இந்த நூல். இந்தக் காலக்கட்டத்தில் அவர் வரைந்த கார்ட்டூன்களில் பெரும் பகுதி இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றும் எந்த சூழ்நிலையில் வரையப்பட்டது என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு கார்ட்டூனுக்கு அடியில் ‘காமென்ட்’ எழுதப்பட்டிருக்கிறது. கார்ட்டூன் வெளியான விகடன் இதழின் தேதியும் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் ஒரு வரலாற்றுப் பதிவு. பக்கங்களைப் புரட்டிக்கொண்டே போனால் ஆட்சி மாறுவதும், அரசியல் தலைவர்கள் மாறுவதும் கண்முன்னால் நிழற்படமாக ஓடும் |