கர்ணனின் கவசம்

கர்ணனின் கவசம்
வாழ்க்கையே ஒரு மர்மக் கதை போன்றதுதான். எதிர்பாராத நிகழ்வுகளும் திருப்பங்களும் நிறைந்த வாழ்க்கைதான் ரசிக்க முடிவதாக இருக்கிறது. அதனால் அமானுஷ்யங்களும் மர்மங்களுமாகப் பின்னப்படும் கதைகளுக்கு உலகின் எல்லா மொழிகளிலும் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. ‘கர்ணனின் கவசம்’ அப்படியான ரகத்தில் ஒரு புதிய முயற்சி.
தமிழகமெங்கும் பெரிய பெரிய போஸ்டர்கள், பெரிய அளவில் ‘தினகரன்’ நாளிதழில் விளம்பரங்கள் என ஒரு சினிமாவுக்கு நிகரான ஆரவாரத்துடன் தொடர்கதையாக இது ‘குங்குமம்’ இதழில் வெளியானபோது பத்திரிகை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வேகமும் விறுவிறுப்பும் இந்தக் கதையில் இருந்தது.
எதிர்பாராத கதாபாத்திரங்கள் திடீர் திடீரென அறிமுகம் ஆவதும், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை அவர்கள் செய்வதும்தான் இந்தக் கதையின் தனித்துவம். புராணக் கற்பனைகள், அறிவியல், கணிதம், விமானத் தொழில்நுட்பம் என எல்லாமே இணையும் புள்ளியில் இந்தக் கதை பயணிக்கிறது. கால யந்திரத்தில் ஏறி கடந்த காலத்துக்கும் பயணிக்கலாம்; எதிர்கால மனிதர்களோடும் பழகலாம். இரண்டு சாத்தியங்களையும் இந்தக் கதை உங்களுக்குத் தருகிறது. ‘குங்குமம்’ இதழில் இது தொடராக வெளியானபோதே, ‘எப்போது இதைத் தொகுத்து நூலாக வெளியிடுவீர்கள்?’ என ஏராளமான வாசகர்கள் போனிலும், நேரிலும், கடிதங்களிலும் கேட்டார்கள். அவர்கள் அத்தனை பேரும் நூலாக இதை வாங்கி மீண்டும் ஒருமுறை வாசித்தார்கள்; ஏராளமான புதிய வாசகர்களும் இந்த நூலுக்கு தினம் தினம் கிடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.