கரியோடன்

கரியோடன்
சாரோன் இருபது ஆண்டுகளின் பரப்பில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு “கரியோடன்." மாணவப் பருவத்திலிருந்தே சாரோன் சமூக நீதித் தேடலை வாழ்வியலாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் தேடல் தான் இவருக்குக் கிடைத்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு ஆவணப்படங்களை இயக்குபவராக ஆக்கியிருக்கிறது.
சாரோனின் இந்த ஆர்வமே இவரது கதைகளின் உள்ளியக்கமாக உள்ளது. இவர் சார்ந்த பேரணாம்பட்டு மலைப்பகுதி வாழ்வைப் பல கதைகள் பேசுகின்றன. இயறகையை வென்றும் அதனிடம் தோற்றும் வாழும் மனிதர்களின் வாழ்வியல் நுட்பங்களைக் கதைகள் சொல்லுகின்றன. அம்மக்களின் மொழி கதைகளில் அப்படியே படிந்துள்ளது. சில நேரங்களில் உணர்ச்சி மேலீட்டால் கவிதையாகவும் ஆகிவிடுகிறது. இயற்கையில் திளைத்து சுதந்திரம் காண்பவர்களாக இவர் பாத்திரங்கள் இருக்கிறார்கள். கதைகளிலிழையொடும் சோகமும் சமூக நீதிக்கான குரலாகவே ஒலிக்கிறது. வலிகளும் பெருமிதமாகவே சொல்லப்படுகின்றன.