காட்டிலிருந்து வந்தவன்

காட்டிலிருந்து வந்தவன்
சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இந்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன, 'ஒரு துவக்கின் கதை’ இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. யுத்தத்துக்கு முந்திய அமைதியான யாழ்ப்பாணக் கிராமத்துச் சூழலில் தொடங்கும் கதை; யுத்தம் உக்கிரமடைந்து, கிராமங்கள் அழிந்து, குடும்பங்கள் சிதைந்து, மக்கள் சிதறிப் புலம்பெயர்ந்த சூழலில் முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வன்முறைக்கு எதிராக எழுதப்பட்ட மிகச்சிறந்த ஈழத்துச் சிறுகதைகள் சிலவற்றுள் இதுவும் கட்டாயம் இடம்பெறும்.
சுதாராஜின் கதைகள் வெவ்வேறு வகையில் மனித ஆளுமையின் உடைவுகளையும் அதன் உயிர்ப்பையும் பேசுகின்றன. மனிதநேயமும், மனிதத்தின் உயிர்ப்புமே அவரது அரசியலாகவும் அழகியலாகவும் படைப்புகளூடாக வெளிப்படுகின்றன. அவரது இலக்கியத்தில் போலிப்பகட்டு, சுத்துமாத்து எதுவுமில்லை. எல்லாமே எளிமையானவை; வெளிப்படையானவை; நேரடியாகச் சொல்லப்படுபவை.