ஜெயில்... மதில்... திகில்!

ஜெயில்... மதில்... திகில்!
சிறைச்சாலைகள், குற்றவாளி தன் தவறுக்கு தனிமையில் வருந்தி, மனம் திருந்திட வழிவகுக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டன. தவறு செய்தோரில் பெரும்பாலோர் உணர்ச்சிவயத்தில் தவறிழைத்தவர்களாகவே இருப்பார்கள். நெடிய மதிற்சுவர்களுக்குள்ளே சிறையில் நடக்கும் செயல்கள், கைதிகளின் நடவடிக்கைகள், சிறை நடைமுறைகள், சிறைக்குச் சென்ற அரசியல் தலைவர்கள், பிரபலங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இந்த நூலெங்கும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். 39 ஆண்டுகளாக சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றியது குறித்து தன் அனுபவங்கள் குறித்து ஜூனியர் விகடனில் ஜி.ராமச்சந்திரன் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘‘சிறை என்பது முன்பு தண்டிக்கும் இடமாக இருந்தது. இப்போது, மனித மனங்களைச் செப்பனிடும் பட்டறையாக மாறியிருக்கிறது. சிறைவாசிகளைப் புறக்கணிப்பதும் வெறுப்பதும் அவர்களை மீண்டும் குற்றத்தின் திசையிலேயே பயணிக்கவைக்கும். இந்தத் தொடர், சிறைவாசிகளைப் பற்றி மக்களின் மனங்களிலிருந்த சித்திரத்தை மாற்றியிருக்க வேண்டுமென்று விழைகிறேன்’’ என நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதற்கு ஏற்ப, சிறை பற்றியும் கைதிகள் பற்றியும் இருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றிவிடும். இனி சிறைச்சாலை பற்றிய உண்மைகளை நீங்கள் அறிய அதன் கதவுகள் திறக்கும்!