ஹர்ஷர்
ஹர்ஷர்
இந்தியாவை ஆட்சி செய்த முற்கால அரசர்களில் சிறந்தவர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின், தேசத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர் பேரரசர் ஹர்ஷர். ஹர்ஷரின் சாதனைகளை மட்டுமல்ல பண்டைய இந்தியர்களின் திறமைகளையும், கலைகளையும் இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் அ.கணேசன். ஹர்ஷர் போரில், நிர்வாகத்தில் மட்டும் சிறந்தவர் அல்ல கலைகளிலும் சிறந்தவர். கலைகளையும், இலக்கியத்தையும் மக்களுக்காகவே அவர் படைத்தார். தான் இயற்றிய நாகானந்தா நாடகத்தில் ஹர்ஷர் கீழ்க்காணும் வரத்தைத் தேவதையிடம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறார். ‘மேகங்கள், குறித்த காலத்தே மழைபொழியட்டும். மக்கள் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து பச்சை ஆடையை நிலத்துக்கு அணிவிக்கட்டும். எல்லா மக்களும் நற்செயல்களைச் செய்து குவிக்கட்டும். எல்லா அழிவிலிருந்தும் நாடு விடுபடட்டும். மக்கள் பொறாமையற்ற உள்ளங்களுடன் களிக்கட்டும். உறவினர், நண்பர்களால் இடையூறு அற்ற இன்பதைச் சுவைக்கட்டும்’. அதனால்தான் அவர் அரசர்களில் சிறந்தவராக இருந்தார்! கங்கை நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார். அரசாங்கப் படகுகளும், தனியார்ப் படகுகளும் அதிகமாகக் கங்கையில் காணப்பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஹர்ஷரின் ஆட்சி வலபி, ஒடிசாவின் சில பகுதிகள் வரை நீடித்தது. அரசாங்க, வணிக, போர்த் துறைகள், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்தன. ஹர்ஷப் பேரரசில் யானைப் படை முக்கிய நிலையில் இருந்தது. ஹர்ஷரின் விருப்பமான யானைகள் போர்க்களத்தில் பல பணிகளுக்கு உதவின என்பதை பாணர் விவரிக்கிறார். எதிரிகளின் கூடாரங்களை முட்டிக் குழப்பம் விளைவிக்கவும், தந்தத்தால் பகைவர்களை நசுக்கவும், வெறி பிடித்து ஓடிப் பகைவர்களைக் கொல்லவும் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி எண்ணற்றத் தகவல்களை விறுவிறுப்பான நடையில் ஆதாரங்களுடன் விளக்கிச் சரித்திரத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் நூல் ஆசிரியர்!
ஹர்ஷர் - Product Reviews
No reviews available