எங்கே போகிறோம் நாம்?

எங்கே போகிறோம் நாம்?
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி இயக்கம் கொண்டவர். நம் நாட்டில் வளர்ந்துவிட்ட சமூக சீர்கேட்டுக்கு காரணமான அரசியல், கட்சி, கொள்கை, கட்சித்தாவல், சந்தர்ப்பவாதம், வாக்குறுதி, இலவசம், மது, முகஸ்துதி, வன்முறை, லஞ்சம், ஊழல், விவாகரத்து... என பல பொருள்களில் ‘எங்கே போகிறோம் நாம்?’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்! தன்னலம் கருதாமல் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்வோரும், அறிவார்ந்த நிர்வாகத்திறமை மிக்கவர்களும், மாசற்ற தொண்டுள்ளம் கொண்டவர்களும் மட்டுமே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வழி காட்ட முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது இந்த நூல். அரசியல்வாதிகளின் கண்துடைப்பு சலுகைகளால் அடிமைகளாக ஏமாற்றப்படுகிறோம். பின்னால் நிகழப்போகும் விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இப்படி, தரிகெட்டு கிடக்கும் சமுதாயத்துக்கு விடிவு காலம் பிறக்க அடித்தளம் அமைத்துள்ளது இந்த நூல். அனைவரும் படித்து விழிப்பு உணர்வு பெற வேண்டிய பயனுள்ள நூல் இது!